அசைக்கமுடியாத 140 ஆண்டுகால சாம்ராஜ்ஜியம்.! இது நடந்தால்.. வங்கதேசம் காலடியில் கிரிக்கெட்!
27 ஐசிசி பட்டங்கள், 6 உலகக்கோப்பைகள், 140 ஆண்டுகள் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் இல்லாத ஆஸ்திரேலியாவின் சாம்ராஜ்ஜியத்தை சவாலுக்கு அழைத்துள்ளது வங்கதேசம். டர்வினில் முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வெற்றி பெற்று, 2வது டெஸ்ட்டை ஆகஸ்ட் 22ல் கைப்பற்றினால், ஆஸ்திரேலியாவை முழுமையாக ஒயிட்வாஷ் செய்யும் அபூர்வ சாதனை வங்கதேச கிரிக்கெட்டின் மிகப்பெரிய மகுடமாக மாறும்.
மொத்தமாக 27 ஐசிசி பட்டங்களை வென்றிருக்கும் ஆஸ்திரேலியா அணி, இதுவரை உலகையே அச்சுறுத்தும் கிரிக்கெட் அணியாக விளங்கிவருகிறது. ஆடவர் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 3 உலகக்கோப்பைகள் வென்றது மொத்தமாக 6 உலகக்கோப்பைகள் வென்றதன் மூலம், ஒரு ஆஸ்திரேலிய வீரன் நினைத்தால் கூட கோப்பை வென்றுகொடுக்க முடியும் என்ற வலுவான கோட்டையை கட்டமைத்துள்ளது அந்த அணி. நாக்அவுட் போட்டிகள் என வந்துவிட்டாலே உயிரைக்கொடுத்து விளையாடும் மாண்பை கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா அணியில், 11 வீரர்களும் ஆட்டத்தையே மாற்றும் ஒரு மேஜிக்கை நிகழ்த்தக்கூடியவர்கள்.
எப்படி இவர்களால் தலைசிறந்த வீரர்களை உருவாக்க முடிகிறது, ஒருவர் போனால் ஒருவர் என சிறந்தவர்களாக வந்துகொண்டே இருக்கிறார்களே என்ற ஆதங்கம் பல நாட்டு ரசிகர்களுக்கு இன்றுவரை இருந்துவருகிறது. முதல்தர போட்டிகளில் மலைபோல் ரன்கள் குவித்த மைக் ஹஸ்ஸிக்கே 30 வயதில் தான் டெஸ்ட் விளையாட வாய்ப்பு கிடைக்கிறது என்றால், ஆஸ்திரேலியாவின் பட்டரையில் எத்தனை திறமைகள் கொட்டிக்கிடக்கின்றன.
சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் என அனைத்தையும் கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா, ஒரு தலைசிறந்த வீரர்களை உருவாக்கும் பாதையை வடிவமைத்துள்ளது. அதனாலேயே அவர்களால் செல்லும் இடமெல்லாம் வெற்றியை குவிக்கவும், சொந்த மண்ணிற்கு எந்த அணி வந்தாலும் டாமினேட் செய்யவும் முடிகிறது.
இந்தசூழலில் தான் சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு சென்று டெஸ்ட் கிரிக்கெட் விளையாடிவரும் வங்கதேச கிரிக்கெட் அணி, யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்தி வரலாறு படைத்துள்ளது. அதிலும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கையால் கூட முடியாத, அதிவேகமாக ஆஸ்திரேலியாவை டெஸ்ட்டில் வீழ்த்திய ஆசிய அணியாக உருவெடுத்துள்ளது. ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய வெறும் 3 போட்டிகளிலேயே முதல் வெற்றியை பதிவுசெய்து மிரட்டியுள்ளது வங்கதேசம்.
ஆஸ்திரேலியாவிற்கு சென்று 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவரும் வங்கதேச அணி, டர்வின் மைதானத்தில் நடந்தபோட்டியில் பேட்டிங், பவுலிங் அனைத்திலும் டாமினேட் செய்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியை பதிவுசெய்தது. ஆஸ்திரேலியா மண்ணில் அவர்கள் பெறும் முதல் டெஸ்ட் வெற்றி இதுவாகும். இந்தசூழலில் ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்யும் வாய்ப்பு வங்கதேசத்திற்கு கிடைத்துள்ளது. இதைமட்டும் வங்கதேசம் செய்துவிட்டால் 140 ஆண்டுகளாக சொந்தமண்ணில் ஒயிட்வாஷே சந்திக்காத ஆஸ்திரேலியாவை ஒரு இருளுக்குள் தள்ளமுடியும். இது உலகக்கோப்பை வெல்வதை விட ‘வங்கதேச அணிக்கு மிகப்பெரிய மகுடமாக மாறும்.
கடைசியாக ஆஸ்திரேலியா 140 ஆண்டுகளுக்கு முன்பு 1886ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரில் தான் இங்கிலாந்துக்கு எதிராக 3-0 என அனைத்து போட்டிகளிலும் தோற்று ஒயிட்வாஷை சந்தித்திருந்தது. அதற்குபிறகு ஒரு வெளிநாட்டு அணியால் கூட ஆஸ்திரேலியாவை அவர்களின் சொந்தமண்ணில் வைத்து ஒயிட்வாஷ் செய்யமுடியவில்லை. வங்கதேச அணிக்கு அந்த வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது, இதை அந்த அணி சாதித்து காட்டினால் கிரிக்கெட் உலகையே ரூல் செய்யும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி புதிய வரலாற்றை வங்கதேசம் எழுதும். நிகழும் பட்சத்தில இது வங்கதேச கிரிக்கெட்டின் பொற்காலமாக மாறும்..! இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி ஆகஸ்டு 22ஆம் தேதி நடக்கவிருக்கிறது.

