\
problems in indian bowling
problems in indian bowlingIANS

’2 வருடத்தில் 30 பவுலர்கள் மாற்றம்.. நிலைத்தன்மை இல்லை!’ அழிவில் INDIA BOWLING!

பும்ரா இன்னும் சில வருடத்திற்கே இருப்பார், அவர் சென்றதற்கு பின் இந்திய அணி என்ன செய்யும் என்ற கேள்வி பெரியதாக எழுந்துள்ளது.
Published on: 
Summary

இந்திய அணியில் பும்ராவின் இல்லாமை பந்துவீச்சில் பெரும் பிரச்சனைகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. புதிய பவுலர்களை கண்டுபிடித்து, அவர்களை வளர்த்தெடுக்காமல் அடிக்கடி மாற்றுவதால் அணியின் நிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. திறமையான பவுலர்களை உருவாக்கி, பும்ராவுக்கு மாற்றாக ஒரு நிரந்தர பவுலரை உருவாக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்திய அணியில் எந்தளவு பந்துவீச்சில் பிரச்சனை இருக்கிறது என்பது, பும்ரா வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாடாமல் போனபிறகு தற்போது அப்பட்டமாக தெரியவந்துள்ளது. இந்தியாவிற்கு எதிராக 3வது ஒருநாள் போட்டியில் 351 ரன்களை வெற்றிகரமாக சேஸ்செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, தற்போது டி20 போட்டியிலும் 250 ரன்களை 9 பந்துகள் மீதம் வைத்து சேஸ்செய்து மிரட்டியுள்ளது.

கிட்டத்தட்ட 501 ரன்கள் அடிக்கப்பட்ட இந்தப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் ராஸ்டன் சேஸ் 4 ஓவரில் வெறும் 24 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஆனால் இந்தியாவில் அனைத்து பவுலர்களும் 10-க்கு மேலான எகானமியுடன் பந்துவீசியிருந்தனர். ஒருவரால் கூட ரன்களை குறைவாக விட்டுக்கொடுக்க முடியவில்லை. இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளரால் செய்யமுடிந்ததை, இந்திய பவுலரால் செய்யமுடியவில்லை. இதன்மூலம் இந்தியாவின் பந்துவீச்சில் எவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது என்பது அப்பட்டமாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

virat kohli - ravi shastri
virat kohli - ravi shastripti

விராட் கோலி, ரவி சாஸ்திரி காம்போவில் புதியதாக பந்துவீச்சாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, அவர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் வழங்கி பாதுகாக்கப்பட்டனர். அது போட்டியில் ரிசல்ட்டிலும் இந்தியாவிற்கு சாதகமாக பிரதிபலித்தது. ஆனால் தற்போது கவுதம் கம்பீர் தலைமையிலான இந்திய அணியில் பல்வேறு புதிய பவுலர்கள் அணிக்குள் வருகின்றனர், பின்னர் எங்கு செல்கின்றனர்? என்ன ஆகின்றனர்? என்பதே தெரியாமல் இருந்துவருகிறது. ஒரு பவுலர் சிறப்பாக செயல்படுகிறார் என உள்ளே எடுத்துவந்தபிறகு, அவர்கள் ஏன் தக்கவைக்கப்படாமல் காணாமல் போகிறார்கள் என்ற கேள்விக்கு தற்போதுவரை விடையே தெரியவில்லை.

ராகுல் டிராவிட் தலைமைக்கு பிறகு கம்பீர் தலைமையில் பவுலர்கள், பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் என மொத்தம் 33 வீரர்கள் மாற்றி மாற்றி விளையாடப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை இந்திய அணி பந்துவீச்சில் ஒரு நிரந்த தீர்வை நோக்கி செல்லவில்லை என்பதையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

gambhir
gambhirpti

சமீபத்தில் விளையாடப்பட்ட பவுலர்கள்: மயங்க் யாதவ், ஹர்சித் ராணா , பிரசித் கிருஷ்ணா , யாஷ் தாக்கூர் , அன்ஷுல் கம்போஜ் , குர்னூர் பிரார் , அசோக் சர்மா , பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங் , முகமது சிராஜ் , ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா.

மாற்றப்பட்ட ஸ்பின் & ஆல்ரவுண்டர்கள்:

ரவி பிஷ்னோய் , வாஷிங்டன் சுந்தர் , மானவ் சுதர் , சரண்ஷ் ஜெயின் , ஹர்ஷ் துபே , ஆக்கிப் நபி, குல்தீப் யாதவ் , அக்சர் படேல் , ரவீந்திர ஜடேஜா , வருண் சகரவர்த்தி.

மாற்றப்பட்ட பேட்ஸ்மேன்கள்:

சூர்யன்ஷ் ஷெட்ஜ் , தேவ்தத் பாடிக்கல் , துருவ் ஜூரல், அபிஷேக் சர்மா , சஞ்சு சாம்சன், ஷிவம் துபே , நிதிஷ் குமார் ரெட்டி , திலக் வர்மா , நமன் திர் , ரிங்கு சிங் , சுப்மன் கில் , யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

india t20 team
india t20 teambcci

பந்துவீச்சில் பல்வேறு மாற்றங்களை செய்துவருவதால் அணியில் உள்ளே வரும் பவுலர்கள் நிரந்தரமாக ஒன்றைக் கற்றுக்கொள்வதோ, வளர்த்துக்கொள்வதோ இல்லாமல் இருந்துவருகின்றனர். ஒரு பவுலரை உருவாக்காமல், முழுமையாக செதுக்கப்பட்ட ஒரு பவுலர் உள்ளேவரவேண்டும், அவரை வைத்து நாம் பெயர் வாங்கிகொள்ளலாம் என்ற எண்ணத்தில் தான் கம்பீர் இருந்துவருகிறார். இப்படியான அடிக்கடி மாற்றப்படும் பவுலர்களால் நிலையான ரிசல்ட்டை கொடுக்க முடிவதில்லை.

இப்போதைய சூழலில் இந்திய அணிக்கு வெறும் சப்போர்டிங் பவுலர் மட்டுமே போதுமானவர் இல்லை, ஒருவேளை பும்ரா நிரந்தரமாக சென்றுவிட்டால் அதற்கு இந்திய பவுலிங்கை வழிநடத்தவேண்டிய பவுலர் அணிக்கு தேவை. அதைப்புரிந்துகொண்டு திறமையான பந்துவீச்சாளர்களை உற்பத்தி செய்வதில் இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும், இந்தியாவில் அடுத்த 10 வருடங்களுக்கு தேவையான தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் வந்துவிட்டனர், ஆனால் பந்துவீச்சில் அடுத்த வருடத்திற்கு கூட யார் இருக்கிறார்கள் என்பதே கேள்விக்குறியாக இருந்துவருகிறது. இப்போது பந்துவீச்சு தேவையென்றால் கூட பும்ரா, புவனேஷ்வர், ஷமி, சிராஜ் என தான் யோசிக்க வேண்டியிருக்கிறது. பும்ரா சர்வதேச கிரிக்கெட்டிற்கு வந்து சரியாக 10 ஆண்டுகள் ஆகிறது. பும்ராவை போல அடுத்த 10 ஆண்டுகள் அணியை வழிநடத்தக்கூடிய பவுலர்களை இந்தியா கண்டுபிடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் கோரிக்கையாக இருந்துவருகிறது.

problems in indian bowling
’பேட்டிங் வெறி ஊறிப்போன ஒருத்தரால தான்..’ 42 வயதில் 37 பந்தில் சதம்.. மிரட்டிய ஏபிடி வில்லியர்ஸ்!
problems in indian bowling
9 ஆண்டுக்கு பின் சதம்.. ஆஸ்திரேலியாவை மீட்டெடுத்த மேட் ரென்ஷா! SA-வுக்கு பதிலடி!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com