9 ஆண்டுக்கு பின் சதம்.. ஆஸ்திரேலியாவை மீட்டெடுத்த மேட் ரென்ஷா! SA-வுக்கு பதிலடி!
9 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் சதமடித்த மேட் ரென்ஷா, ஆஸ்திரேலியாவை 300 ரன்களுக்கு மேல் அழைத்துச் சென்றார். தென்னாப்பிரிக்காவின் சிறப்பான பந்துவீச்சை எதிர்த்து தனியாளாக போராடிய அவர், அணியை மீட்டெடுத்தார். கம்மின்ஸ் உடன் இணைந்து ஆட்டத்தை நிலைநாட்டிய ரென்ஷா, தனது 2வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார்.
தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் 10 போட்டிகளில் 8-ல் வென்று முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவை எதிர்த்து 2வது இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்கா மோதுவதால் எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. அதிலும் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா சாம்பியன் பட்டம் வென்றதால், கங்காருகள் அதற்கு பழிவாங்குவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பும் இருந்தது.
இந்தசூழலில் பரபரப்பாக தொடங்கப்பட்ட போட்டியில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய தென்னாப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா 124 ரன்களை எட்டுவதற்குள் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது. வியான் முல்டர் மற்றும் மார்கோ யான்சன் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர்.
எப்படியும் ஆஸ்திரேலியா 200 ரன்னுக்குள் சுருண்டுவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தனியாளாக போராடிய மேட் ரென்ஷா அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி சதமடித்தார். ஒருபக்கம் விக்கெட் சரிந்தாலும் கேப்டன் பேட் கம்மின்ஸ் உடன் ஜோடி சேர்ந்து அணியை மீட்டு எடுத்துவந்தனர். கம்மின்ஸ் 43 ரன்கள் அடித்து அவுட்டாக, 130 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடிவரும் மேட் ரென்ஷா ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை 300க்கு மேல் அழைத்துச்சென்றுள்ளார். ரென்ஷாவின் 2வது டெஸ்ட் சதம் இதுவாகும், அதுமட்டுமில்லாமல் 9 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் சதமடித்து அசத்தியுள்ளார் மேட் ரென்ஷா.

