1 வருடம் கழித்து அரைசதமடித்த SKY.. 237 ஸ்ட்ரைக்கில் மிரட்டிய இஷான் கிஷன்! இந்தியா அபார வெற்றி!
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான இரண்டாவது டி20 போட்டியில், இந்தியா 209 ரன்கள் இலக்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகரமாக அடைந்தது. இஷான் கிஷன் 21 பந்தில் அரைசதமடித்து அதிரடி காட்ட, சூர்யகுமார் யாதவ் 23 பந்தில் அரைசதமடித்து 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இந்தியாவிற்கு வெற்றியை தேடித்தந்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று உள்ளது. முன்னதாக, இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என வென்ற நியூசிலாந்து அணி வரலாற்றுச் சாதனை படைத்தது.
இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் 238 ரன்கள் குவித்த இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி ராய்ப்பூரில் நடைபெற்றது.
237 ஸ்ட்ரைக்ரேட்டில் மிரட்டிய இஷான் கிஷன்..
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவரில் 208 ரன்கள் சேர்த்தது. சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 4 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 44 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னர் 27 பந்தில் 47 ரன்களும் சேர்த்தனர்.
209 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும், அபிஷேக் சர்மா 0 ரன்னிலும் வெளியேற 6 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது இந்தியா. ஆனால் 3வது வீரராக களமிறங்கிய இஷான் கிஷன் 21 பந்தில் அரைசதமடித்து மிரட்டினார். 32 பந்தில் 11 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் என நாலாபுறமும் சிதறடித்த கிஷன் 76 ரன்னில் வெளியேறினார்.
மறுமுனையில் ஃபார்ம் அவுட்டில் தடுமாறிவந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் தன்னுடைய பழைய ஃபார்மிற்கு திரும்பினார். 23 பந்தில் அரைசதமடித்து அசத்திய சூர்யா, இறுதிவரை ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் குவித்து இந்தியாவிற்கு வெற்றியை தேடி தந்தார். இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.
ஒரு வருடம் கழித்து அரைசதம்..
கடைசியாக 2024 அக்டோபர் மாதம் அரைசதமடித்திருந்த சூர்யகுமார் யாதவ், கடந்த ஒரு வருடமாக ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். இந்த சூழலில் 23 இன்னிங்ஸ்களுக்கு பிறகு ஒரு வருடம் கழித்து அரைசதமடித்து அசத்தினார் சூர்யகுமார் யாதவ்.
மறுமுனையில் நியூசிலாந்துக்கு எதிராக 21 பந்தில் அரைசதமடித்த இஷான் கிஷன், நியூசிக்கு எதிராக அதிவேகமாக அரைசதமடித்த இந்திய வீரராக சாதனை படைத்தார். கடந்த போட்டியில் அபிஷேக் சர்மா 22 பந்தில் அடித்தது சாதனையாக இருந்தது.

