இடி, மின்னல், பட்டாசு..கருணையே இல்லாமல் அதிரடி.. மீண்டும் தீபாவளி கொண்டாடிய ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள்!

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி டெல்லி அணியை 67 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐபிஎல் தொடரில் தனது 5ஆவது வெற்றியை பதிவு செய்ததுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி -  டெல்லி அணி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி - டெல்லி அணிமுகநூல்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் போட்டி நடக்கிறது என்றாலே இன்றைக்கு என்ன சாதனையை முறியடிக்கப் போகிறார்கள், எவ்வளவு ரன்கள் குவிக்கப் போகிறார்கள் என்ற எண்ணம் ரசிகர்களுக்கு வந்துவிடும். அந்த அளவிற்கு ஹைதராபாத் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கூட கருணையே இல்லாமல் எதிரணியின் பந்துவீச்சை துவம்சம் செய்கிறார்கள்.

பெங்களூரு அணி வசம் இருந்த மிகப்பெரிய சொத்தான ஐபிஎல் வரலாற்றிலேய அதிகபட்ச ரன்கள் என்ற ரெக்கார்ட்டை தட்டிக் தூக்கி 277 ரன்களுடன் புதிய சாதனை படைத்தார்கள். அத்தோடு விட்டார்களா எங்கள் சாதனையை யாரும் முறியடிக்க வேண்டாம் என மற்றொரு போட்டியில் 287 ரன்கள் விளாசி அவர்கள் சாதனையை அவர்களே முறியடித்தார்கள். அப்படித்தான், டெல்லி அணிக்கு எதிரான 35 ஆவது லீக் போட்டியில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி -  டெல்லி அணி
தல தோனியின் ஆட்டத்தை கண்டு வியந்த ஃபிளெமிங்

டாஸ் வென்று டெல்லி அணி பீல்டிங் தேர்வு செய்ய, ஹைதராபாத் அணிக்காக தொடக்க வீரர்களாக பேட்டிங் செய்ய வந்த டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் முதல் ஓவரில் இருந்தே வாண வேடிக்கையை ஆரம்பித்துவிட்டார்கள். கொஞ்சம் கூட யோசிக்கவே விடாமல் சிக்ஸர், பவுண்டரிகளாக பறக்கவிட்டனர். கலீல் அஹமது வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் பறந்தது. லலித் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகள் விளாசப்பட்டது. நோர்ட்ச் வீசிய மூன்றாவது ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகளை அள்ளி தெளித்தார் டிராவிஸ் ஹெட். லலித் யாதவ் வீசிய 4 ஆவது ஓவரில் 3 சிக்ஸர்கள் பறந்தது.

ஒரு மாற்றத்திற்காக குல்தீப் யாதவை உள்ள கொண்டு வர அதுவே டெல்லி அணிக்கு மீண்டும் சோகமாக மாறியது. குல்தீப் வீசிய ஓவரில் 3 சிக்ஸர்கள் பறந்தது. 5 ஆவது ஓவரிலேயே 100 ரன்களை கடந்துவிட்டனர் ஹைதராபாத் அணியினர். என்னா அடிடா இது என்று பார்ப்பவர்கள் வாயை பிளப்பதுபோல், முகேஷ் குமார் வீசிய 6 ஆவது ஓவரில் 4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசி டெல்லி அணியை விளிபிதுங்க வைத்தார் டிராவிஸ் ஹெட். பவர் பிளேவின் 6 ஓவர்களில் மிகப்பெரிய வரலாற்றுச் சாதனையை நிகழ்த்திவிட்டனர் டிராவிஸ் ஹெட்டும், அபிஷேக் ஷர்மாவும். 6 ஓவர்களில் 125 ரன்கள் குவித்து பவர் பிளேவில் அதிகபட்ச ரன் என்ற சாதனயை 105 ரன்கள் எடுத்திருந்த கொல்கத்தாவிடம் இருந்து தட்டித் தூக்கினர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியினர்.

என்ன!! ஆறு ஓவரிலேயே 125 ரன்னா.. அப்படினா இன்றைக்கு எப்படி 300 ரன் அடிக்காம விடமாட்டாங்க போலயே என ஆடியன்ஸ் நினைக்க, கொஞ்ச நேரம் ஆட்டம் லைட்டா டிராக் மாறியது. 12 பந்துகளை மட்டுமே சந்தித்த அபிஷேக் ஷர்மா 6 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்தநிலையில் ஆட்டமிழக்க, 154 ரன்னிற்குள் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகள் பறிபோனது. ஆட்டத்தின் நாயகன் டிராவிஸ் ஹெட் 32 பந்துகளில் 6 சிக்ஸர், 11 பவுண்டரிகளுடன் 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கரம் 1, க்ளாசன் 15 ரன்னில் நடையைக்கட்டினார்கள்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி -  டெல்லி அணி
IPL 2024| வாணவேடிக்கை நிகழ்த்திய பேட்டர்கள்.. பவர்பிளேயில் புதிய வரலாற்றுச் சாதனை படைத்த சன்ரைசர்ஸ்!

சிறிது நேரம் ரன்கள் வராமல் இருந்தாலும், நிதிஷ் குமார் ரெட்டி 37 ரன்களும், சபாஷ் அஹமத் 59 ரன்களும் எடுக்க சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் குவித்துவிட்டது. என்ன ஹைதராபாத் அணியினர் பொசுக்கு பொசுக்குனு 250 ரன்னுக்கு மேல அடிக்குறாங்க என எதிரணியினர்கள் பீதியை கிளப்புகிறது.

267 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. முதல் ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரி விளாசிய பிரித்வி ஷா 5 ஆவது பந்திலே நடையை கட்ட, அடுத்து 1 ரன்னில் பின்னாலேயே ஆட்டமிழந்தார் டேவிட் வார்னர். இரண்டு விக்கெட் விழுந்தால் என்ன நாங்க இருக்கிறோம் என ஆட்டத்தை கையில் எடுத்தாங்க டெல்லி வீரர்கள் பிரசெர் மெக்குர்க் மற்றும் அபிஷேக் போரல். வெளு வெளுவென வெளுத்து வாங்கி சிக்ஸர் மழை பொழிந்தார் மெக்குர்க். அவரது அதிரடியால் டக்கென்று டெல்லி அணி 100 ரன்களை கடந்துவிட்டது. ஆனால், 18 பந்துகளை மட்டுமே சந்தித்த மெக்குர்க் 7 சிக்ஸர், 5 பவுண்டர்களுடன் 65 ரன்கள் விளாசித்தள்ளி ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக் போரலும் 22 பந்துகளில் ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 42 ரன்னில் அடுத்து நடையைக்கட்டினார்.

இந்த ஜோடி டெல்லி அணிக்கு சற்றே பயம் காட்டியது. ஆனால், அடுத்து வந்த யாரும் களத்தில் நிற்கவே இல்லை. லலித் யாதவ் 7, அக்ஸர் பட்டேல் 6, நோர்ட்ச், குல்தீப் யாதவ் டக் அவுட் என சீட்டுகட்டுபோல் விக்கெட் சரிந்தது. தனி ஆளாக போராடிய கேப்டன் ரிஷப் பண்ட்டும் கடைசி விக்கெட்டாக 44 ரன்னில் ஆட்டமிழக்க 199 ரன்னில் டெல்லி கேபிடல்ஸ் அணி ஆல் அவுட் ஆனது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. ஹைதராபாத் அணியில் நடராஜன் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது மட்டுமல்லாமல் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி -  டெல்லி அணி
ஐபிஎல் 2024 | கே.எல்.ராகுல், ருத்துராஜ்-க்கு தலா 12 லட்சம் ரூபாய் அபராதம்! ஏன்?

ஹைதராபாத் அணி நடப்பு ஐபிஎல் சீசனில் 5 ஆவது வெற்றியை பதிவு செய்து இடண்டாவது இடத்தை எட்டியது. ஒரே போட்டியில் டாப் லிஸ்டிற்கு சென்றது அந்த அணி. மீண்டுமொருமுறை எதிரணியினருக்கு பேட்டிங்கில் பயத்தை காட்டியிருக்கிறது ஹைதராபாத் அணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com