’இது ஃபைனல்.. கொஞ்சம் இதை கவனத்தில் வையுங்க’ - இந்திய அணிக்கு அட்வைஸ் சொன்ன கவாஸ்கர்!
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு, தொடர்ந்து சொதப்பி வரும் அபிஷேக் சர்மாவை மாற்றிவிட்டு, அவருக்குப் பதில் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு தரவேண்டும் என இந்திய அணீயின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான டி-20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது. 2023ஆம் ஆண்டில் இதே நரேந்திர மோடி மைதானத்தில் ஆஸ்திரேலியாவிடம் ஒருநாள் உலகக்கோப்பையை இழந்த இந்திய அணி, தற்போது அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றால் இரண்டு புதிய சரித்திரங்கள் படைக்கப்படும். ஒன்று, டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இரண்டு முறை வென்ற முதல் நாடு. மற்றொன்று, சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமை இந்தியாவிற்கு சேரும்.
இந்த நிலையில், இறுதிப்போட்டியை முன்னிட்டு இன்றைய ஆடும் லெவனில் மாற்றம் இருக்குமா எனக் கேள்விகள் எழுந்துள்ளன. காரணம், தொடர் முழுவதும் அபிஷேக் சர்மா சொதப்பி வருவதுதான். அவருக்குப் பதிலாக ரிங்கு சிங் அல்லது குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனப் பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கரும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர், “அபிஷேக் சர்மா ஐசிசி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கலாம். ஆனால் அவர் தனது தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை. பந்துவீச்சாளர்கள் அவருக்கு எங்கு நெருக்கடி கொடுக்கிறார்களோ, அதே இடத்தில் மீண்டும் மீண்டும் சிக்கி விக்கெட்டை பறிகொடுக்கிறார். அரையிறுதியில்கூட வில் ஜாக்ஸ் விரித்த வலையில் எளிதாக விழுந்து 9 ரன்களில் வெளியேறினார். அவர் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை. ஆகையால், அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக ரிங்கு சிங்கை அணியில் சேர்க்க வேண்டும். அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்க வேண்டும். ரிங்கு சிங் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது.
அவரது உடலில் 'கடவுளின் திட்டம்' (God's Plan) என்று பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அவரைப் போன்ற வீரர்களுக்குச் சில நேரங்களில் அதிர்ஷ்டம் கைகொடுக்கும். இறுதிப் போட்டி போன்ற பெரிய களத்திற்கு ரிங்கு சிங்தான் சரியான தேர்வு. அதேபோல், வருண் சக்கரவர்த்தியின் தன்னம்பிக்கை உடைந்துவிட்டதுபோல் தெரிகிறது. சூப்பர் 8 சுற்றுக்குப் பிறகு பெரிய அணிகளுக்கு எதிராக அவர் திணறி வருகிறார். அகமதாபாத் மைதானத்தின் எல்லைகள் பெரியது. அங்கு குல்தீப் யாதவ் பந்துவீசுவது அணிக்குக் கூடுதல் பலம் சேர்க்கும். தட்டையான ஆடுகளங்களிலும் பந்தைத் திருப்பும் வல்லமை குல்தீப்பிற்கு உண்டு” என ஆலோசனை தெரிவித்துள்ளார். எனினும், அபிஷேக்கை நீக்குவதும் ரிங்கு, குல்தீப்புக்கு வாய்ப்பு கொடுப்பதும் கேப்டன் சூர்யகுமார் கையிலேயே உள்ளது.

