T20 WC | இந்திய அணிக்கு ஷேவாக் எச்சரிக்கை.. புது திட்டத்துடன் களமிறங்கும் Eng!
டி20 உலகக்கோப்பை தொடரில் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்று மோத உள்ளன. இந்தப் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முதலாவது அரையிறுதி முடிந்த நிலையில், அதில் நியூசிலாந்து வெற்றிபெற்று ஃபைனலுக்கு முன்னேறியது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்தப் போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், இவ்விரு அணிகளின் பலம் மற்றும் பலவீனம் குறித்து விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டியில் மோதும் எனக் கணித்துள்ளார்.
இதற்கிடையே, ”இங்கிலாந்தைச சுலபமா ஜெயிக்கலாம்னு நினைக்காதீங்க” என இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர ஷேவாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்,
”நமக்குச் சாதகமான நிலை இருப்பதாலேயே நாம் கட்டாயம் வெற்றி பெறுவோம் என்று அர்த்தம் கிடையாது. நாக் அவுட் போட்டிகளில் எந்தவொரு சாக்குப்போக்கும் எடுபடாது. பேட்டிங், பந்துவீச்சு மற்றும் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் நாம் மிகச் சிறப்பாகச் செயல்பட வேண்டும். நாம் அப்படிச் செய்திருக்கலாமே, இப்படிச் செய்திருக்கலாமே என்ற பேச்சுகளுக்கெல்லாம் நாக் அவுட் போட்டிகளில் இடமே இல்லை” என எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, இந்திய பேட்ஸ்மேன்களை வீழ்த்த Data Analysis மற்றும் வீடியோக்களைத் தங்கள் அணி பெரிதும் நம்பியுள்ளதாக இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எங்களிடம் இந்திய வீரர்கள் குறித்த நிறைய தரவுகள் மற்றும் வீடியோக்கள் உள்ளன.
இந்திய பேட்ஸ்மேன்கள் மைதானத்தின் எந்தப் பகுதியில் பந்தை அடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதையும், எந்த பந்துவீச்சாளருக்கு எதிராக எப்படி விளையாடுகிறார்கள் என்பதையும் நாங்கள் முழுமையாக ஆய்வு செய்துள்ளோம். இந்திய பேட்ஸ்மேன்களுக்கு முடிந்தவரை அதிக நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் எங்கள் பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்துவதே எங்களது முக்கியத் திட்டமாகும். அவர்களுக்கு நெருக்கடி கொடுப்பதே எனது பணியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

