T20 WC | இங்கிலாந்திடம் த்ரில் வெற்றி.. ஃபைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, இந்தியாவை பேட் செய்யப் பணித்தது. அதன்படி, தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். வழக்கம்போலவே அபிஷேக் சர்மா ஏமாற்றினாலும், சஞ்சு சாம்சன் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் 89 ரன்கள் குவித்தார். அவருடன் இணைந்த இஷான் கிஷன் 39 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே 43 ரன்களும், ஹர்திக் 27 ரன்களும், திலக் 21 ரன்களும் எடுத்து இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் எடுக்க வித்திட்டனர். இறுதியில், இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேக்ஸ் மற்றும் ரஷீத் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். இதில், டி20 நாக் அவுட் போட்டிகளில் 50+ ரன்களைக் கொடுத்த பவுலர் எனும் மோசமான சாதனையை ஆர்ச்சர் படைத்தார். இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 4 ஓவர்களுக்கு அவர் 61 ரன்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியிருந்தார்.
பின்னர், 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், தொடக்க வீரர் பிலிப் சால்ட் 5 ரன்களில் ஏமாற்றினாலும் மற்றொரு தொடக்க வீரரான ஜோஸ் பட்லர் 25 ரன்கள் எடுத்தார். அதேநேரத்தில், கேப்டன் ஹேரி ப்ரூக் 7 ரன்களில் விக்கெட்டைப் பறிகொடுத்த நிலையில், ஜேக்கப் பெத்தேல் நங்கூரமாய் நின்றதுடன், ஏதுவான பந்துகளை பவுண்டரி எல்லைக்கு விரட்டியபடியே இருந்தார். இதனால், இங்கிலாந்தின் ரன்ரேட் உயர்ந்தபடியே இருந்தது. அவர் அதிரடியாய் ஆடி சதமடித்தார். அவர் இருக்கும்வரை இங்கிலாந்தே வெற்றிபெறும் என எல்லோரும் எதிர்பார்த்தனர். இதனால், இந்தப் போட்டி கடைசி வரை பரபரப்பாய்ச் சென்றது. இறுதியில் பெத்தேல் 48 பந்துகளில் 105 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியாவிற்கு நம்பிக்கை பிறந்தது. 6 பந்துகளில் 30 ரன்கள் எடுக்க வேண்டிய சூழலில் ஷிவம் துபே கடைசி ஓவரை வீசினார். ஆனால், அவர் வெறும் 22 ரன்களை மட்டுமே கொடுத்து கட்டுப்படுத்தினார். இதையடுத்து இந்திய 7 ரன்களில் த்ரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணி, வரும் மார்ச் 8ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.

