ஒருநாள் கிரிக்கெட்.. விடைபெற்றார் ஸ்மித்..!
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிப் போட்டியில், இந்தியாவிடம் தோல்வி அடைந்ததை அடுத்து ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகத் தெரிவித்துள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து கவனம் செலுத்தப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் மிக முக்கியமான வீரர்களில் ஒருவர் ஸ்டீவ் ஸ்மித். 35 வயதாகும் ஸ்மித் இதுவரை 170 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5800 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 12 சதங்களும் 35 அரைசதங்களும் அடக்கம். 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வென்றது. அந்த அணியில் அதிக ரன்களை அடித்த வீரராக இருந்தவர் ஸ்மித்.
இதுவரை 64 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை வழிநடத்தியுள்ள ஸ்மித், அதில் 32 போட்டிகளில் வெற்றி பெற வைத்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது தொடர்பாக ஸ்மித் கூறுகையில், “இது சிறந்த பயணமாக இருந்தது. அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்தேன். பல அற்புதமான நேரங்களும் மகிழ்ச்சியான நினைவுகளும் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாட ஆவலுடன் இருக்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார். ஸ்மித்தின் ஓய்வு குறித்து பேசிய ஆஸ்திரேலிய தேர்வுக் குழுவின் தலைவரான ஜார்ஜ் பெய்லி, “சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் ஸ்மித்தின் முடிவை நாங்கள் மதிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
2015 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஆஸ்திரேலிய ஆண்கள் ஒருநாள் போட்டிக்கான சிறந்த வீரருக்கான விருதையும், 2015 ஆம் ஆண்டு ஐசிசி ஆண்கள் ஒருநாள் போட்டிக்கான சிறந்த அணியிலும் இடம்பெற்றிருந்தார்.
லெக் ஸ்பின்னராக கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்மித் ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக அறியப்படுபவர். உதாரணத்திற்கு, 2010 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 8வது இடத்தில் பேட்டிங் செய்த ‘லெக் ஸ்பின்னர்’ ஸ்மித், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் 45 ஆவது டெஸ்ட் கேப்டனாக செயல்படத் தொடங்கி நம்பர் 1 டெஸ்ர் பேட்ஸ்மேனாகவும் மாறியது அவரது உழைப்புக்குக் கிடைத்த வெற்றி.