“கடவுளால் காப்பாற்றப்பட்டுள்ளேன்” : அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப் உரை!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிபர் ட்ரம்ப் உரையாற்றி வருகிறார். ட்ரம்பின் பேச்சிற்கு எதிர்ப்புத் தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றுக் கொண்டபின், நாடாளுமன்றத்தில் தனது முதல் மற்றும் முக்கியமான உரையை ஆற்றியிருக்கிறார். ‘அமெரிக்க கனவைப் புதுப்பித்தல்’ எனும் கருப்பொருளில் அதிபர் ட்ரம்ப் உரையாற்ற இருக்கிறார் என்று வெள்ளை மாளிகை நேற்று தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ட்ரம்ப் தனது உரையைத் தொடங்கும்போதே, ‘உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை’ என ஜனநாயகக் கட்சியின் அல் க்ரீன் முழக்கமெழுப்பினார். உடனே குடியரசுக் கட்சியினர் ’USA! USA!’ எனக் கோஷமிட்டனர். ட்ரம்பின் உரையைத் தொந்தரவு செய்ததற்காக சபாநாயகர் மைக் ஜான்சன், அல் க்ரீனை வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். க்ரீன் வெளியேறும்போது குடியரசுக் கட்சியினர் எழுந்து நின்று ‘Get out!’ என்றும் ‘Goodbye!’ என்றும் கோஷமிட்டனர்.
கடும் கூச்சல்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியில் ட்ரம்ப் உரையாற்றினார். அவரது உரையிலிருந்து சில முக்கியப் பகுதிகளை இங்கு காணலாம்.. “பெரும்பாலான நிர்வாகங்கள் நான்கு அல்லது எட்டு ஆண்டுகளில் சாதித்ததை விட நாங்கள் 43 நாட்களில் அதிகமாகச் சாதித்துள்ளோம். மேலும், நாங்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளோம்.
கடந்த நிர்வாகத்திடமிருந்து நாம் பொருளாதாரப் பேரழிவைப் பெற்றோம் என்பது உங்களுக்குத் தெரியும். 48 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மோசமான பணவீக்கத்தை நாம் சந்தித்தோம். அவர்களது கொள்கைகள் எரிசக்திகளின் விலைகளை உயர்த்தின, மளிகைப் பொருட்களின் விலைகளை அதிகரித்தன, அத்தியாவசிய தேவைகளையே மில்லியன் கணக்கான அமெரிக்கர்களுக்கு எட்டாதவாறு செய்தது.
மற்ற நாடுகள் பல தசாப்தங்களாக நமக்கு எதிராக அதிக வரிகளை விதித்து வருகின்றன. இப்போது அந்த நாடுகளுக்கு எதிராக அவ்விதிமுறைகளைப் பயன்படுத்தத் தொடங்குவது நமது முறை.
ஜப்பான், தென் கொரியா மற்றும் பிற நாடுகள் அலாஸ்காவில், பிரம்மாண்ட இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தில் அமெரிக்காவுடன் கூட்டு சேர விரும்புகின்றன. இந்த குழாய்திட்டம் உலகின் மிகப்பெரிய குழாய்திட்டங்களில் ஒன்றாக இருக்கும்.
குழந்தைகள் மீதான பாலியல் மாற்றங்களை நிரந்தரமாகத் தடை செய்யும் மசோதாவை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டுமென விரும்புகிறேன். ‘குழந்தை தவறான உடலில் சிக்கிக் கொள்கிறது’ எனும் பொய்யை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
அன்று பட்லரில் (ட்ரம்பிற்கு எதிரான துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம்) என் உயிர் காப்பாற்றப்பட்டது நல்ல காரணத்திற்காகத்தான் என நான் நம்புகிறேன். அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக ஆக்க கடவுளால் நான் காப்பாற்றப்பட்டுள்ளேன்.” எனத் தெரிவித்துள்ளார்.