15 வயதில் கேப்டனாகும் சூர்யவன்ஷி.. சையத் முஷ்டாக் அலி தொடரில் அங்கீகாரம்!
சையத் முஷ்டாக் அலி தொடரில் பீகார் அணியின் கேப்டனாக 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய டி20 அணியில் இடம்பிடித்த இளம் நட்சத்திரம், தனது திறமையால் புதிய தலைமுறைக்கு வழிகாட்டுகிறார்.
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் விளையாடும் பிஹார் அணியின் கேப்டனாக இளம் பேட்டிங் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டுள்ளார். சூரஜ் காஷ்யப் துணை கேப்டனாக செயல்படுவார்.
17 பேர் கொண்ட பிஹார் அணி, வரும் 14ஆம் தேதி இந்தூரில் சௌராஷ்டிராவுக்கு எதிரான ஆட்டத்துடன் தனது பயணத்தை தொடங்குகிறது. சமீபத்திய ஐபிஎல் தொடரில் 776 ரன்கள் குவித்து அதிக ரன் குவித்த வீரராகவும், இந்திய டி20 அணியிலும் இடம்பிடித்து அசத்தியவர் சூர்யவன்ஷி என்பது குறிப்பிடத்தக்கது.
பீகார் சீனியர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக வைபவ் சூர்யவன்ஷி நியமிக்கப்பட்டது குறித்து, அவருடைய பயிற்சியாளர் மனிஷ் ஓஜா கூறுகையில், "வைபவின் வயதைக் கருத்தில் கொள்ளும்போது, இது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய பொறுப்பு. இருப்பினும், நீங்கள் திரும்பிப் பார்த்தால், துலீப் கோப்பையின் போது தேர்வாளர்கள் அவரிடம் துணை கேப்டன் பொறுப்பை ஒப்படைத்திருந்தனர், அந்தப் பொறுப்பை அவர் மிகச் சிறப்பாக நிறைவேற்றினார். அதே செயல்முறையைத் தொடர்ந்து, பீகார் தேர்வாளர்கள் இப்போது வைபவை அணியின் கேப்டனாக நியமிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், இந்திய அணியில் தற்போதைய உறுப்பினராக இருப்பதால், அவர் கேப்டன் பதவிக்கு இயல்பான போட்டியாளராக இருக்கிறார். அதனால் அந்தப் பொறுப்பு இப்போது அவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பீகார் கிரிக்கெட் சரியான திசையில் செல்கிறது என்பதற்கும், புதிய தலைமுறைக்கு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன என்பதற்கும் இது ஒரு மிகவும் நேர்மறையான அறிகுறியாகும்" என பேசியுள்ளார்.

