திடீரென நின்றுபோன மந்தனா திருமணம் | ”வதந்தி பரப்பாதீங்க” - பலாஷின் உறவினர் வேண்டுகோள்! நடப்பது என்ன?
கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதியின் திருமணம், தற்போதைக்கு தள்ளி வைக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பாக வதந்திகள் பரவி வருகின்றன. அதை நம்ப வேண்டாம் என ஸ்மிருதியின் காதலர் பலாஷின் உறவினர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் ஸ்மிருதி மந்தனாவுக்கும் இசைக் கலைஞர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருணம் நடைபெற இருந்தது. இதற்கான சடங்குகள் நடைபெற்ற நிலையில், திருமணத்திற்கு முன்பு ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, ஸ்மிருதியின் திருமணம் தற்போதைக்கு தள்ளி வைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்பாக பலாஷின் சகோதரி பலாக் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், ’இரு குடும்பங்களின் தனியுரிமை கருதி, ஸ்மிருதியின் தந்தையின் உடல்நிலை காரணமாக, ஸ்மிருதி மற்றும் பலாஷின் திருமணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த முக்கியமான நேரத்தில் குடும்பங்களின் தனியுரிமையை மதிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து பலாஷ் முச்சலுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. அவர் இந்த சம்பவம் தொடர்பாக நீண்டநேரம் அழுததால் உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டதாகவும் பின்னர் அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் செய்திகள் வெளியாகின.
இதற்கிடையே, ஸ்மிருதி தன்னுடைய திருமண சடங்குகள் தொடர்பான படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கினார். இது, ரசிகர்களிடம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தவிர, வதந்திகளுக்கும் வழிவகுத்தது.
பலாஷ் தனது முன்னாள் காதலிக்கு காதலை முன்மொழியும் பழைய படங்கள் இணையத்தில் மீண்டும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின. அத்துடன், ஸ்மிருதியின் திருமண சடங்கின்போது பலாஷ், பெண் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் ஆடிய விவகாரமும் விவாதத்தைத் கிளப்பியது. இதுபோன்ற படங்கள் இணையத்தில் வைரலாகிய நிலையில், ’ஸ்மிருதி மந்தனாவை பலாஷ் ஏமாற்றிவிட்டார்’ எனப் பதிவுகளும் பதியப்பட்டன. அது ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் உறவுகளில் விரிசலையும் பிரச்னையையும் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
”வதந்திகளை உருவாக்க வேண்டாம்”
இப்படி அதிகரித்து வரும் இந்த ஊகங்களுக்கு மத்தியில், பலாஷ் முச்சலின் உறவினர் நீதி தக், ”பஷாஷ் பற்றிய வதந்திகளை உருவாக்க வேண்டாம்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார். அவர், “பலாஷ் இன்று ஒரு மோசமான நிலையைச் சந்தித்து வருகிறார். நீங்கள் அனைவரும் உண்மையை அறியாமல் பலாஷைத் தவறாக மதிப்பிட வேண்டாம். இன்றைய தொழில்நுட்பம் மனிதர்களைவிட மிகவும் முன்னேறிவிட்டது. அதனால் மக்கள் வதந்திகளை நம்பி பலாஷை மதிப்பிடக்கூடாது. அவருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
பலாஷ்-ஸ்மிருதி திருமணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து இணையத்தில் பல்வேறு வதந்திகள் அதிகரித்து வந்தாலும், ஸ்மிருதியின் தந்தையின் உடல்நிலைதான் முக்கியக் காரணம் எனச் சொல்லப்பட்டிருந்தது. இதற்கிடையே, ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

