தந்தைக்குப் பிறகு ஸ்மிருதி மந்தனாவின் காதலருக்கும் உடல்நிலை பாதிப்பு..
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக இருக்கும் ஸ்மிருதி மந்தனாவுக்கும் அவரது நீண்டகால காதலரான இசைக் கலைஞர் பலாஷ் முச்சலுக்கும் கடந்த நவம்பர் 23ஆம் தேதி திருணம் நடைபெற இருந்தது. இதற்கான சடங்குகள் கடந்த சில தினங்களாகவே நடைபெற்று வந்தன. அதற்கு முன்னதாக பலாஷ் முச்சல், ஸ்மிருதியை உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு கண்களைக் கட்டி அழைத்து வந்து காதலைச் சொல்லி சர்ப்ரைஸ் கொடுத்தார். தவிர, மோதிரத்தையும் பரிசாக அளித்தார். இந்த நிலையில், அவர்களுடைய திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தன.
இந்தச் சூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் ஸ்மிருதியின் திருமணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனை ஸ்மிருதியின் மேனேஜர் உஹின் மிஸ்ரா உறுதிப்படுத்தியிருந்தார். பரபரப்பான திருமண ஏற்பாடுகள் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டு அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருக்கலாம் என டாக்டர் நமன் ஷா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளார். ஆனால், தற்போது தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஸ்மிருதியை திருமணம் செய்துகொள்ளவிருந்த பலாஷ் முச்சலுக்கும் உடல்நலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பலாஷின் முச்சலின் தாயார் அமிதா முச்சல் ஹிந்துஸ்தான் டைம்ஸுக்கு அளித்துள்ள பேட்டியில், “ஸ்மிருதியின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனதும், அவர் குணமாகும் வரை திருமண சடங்குகளில் ஈடுபடக் கூடாது என்று முடிவு செய்தவர் பலாஷ். அவர் மிகவும் அழுததால் திடீரென்று அவரது உடல்நிலை மோசமடைந்தது.
இதையடுத்து, அவரை மருத்துவமனையில் அனுமதித்தோம். பரிசோதனை மற்றும் சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது இயல்பாக உள்ளார். ஆனாலும், மன அழுத்தத்தில் உள்ளார். இந்த சூழ்நிலையால் ஸ்மிருதி, பலாஷ் இருவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருமண சடங்குகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், விரைவில் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புகிறேன். பலாஷும் ஸ்மிருதியும் மிக விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள்” என அதில் தெரிவித்துள்ளார்.

