ஸ்மிருதி மந்தனாவின் தந்தை மருத்துவமனையில் அனுமதி.. திருமணம் ஒத்திவைப்பு!
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை வெற்றியின் மகிழ்ச்சியில் இருந்த மந்தனா, காதலர் பலாஷ் முச்சலுடன் திருமணம் நவம்பர் 23ஆம் தேதியான இன்று நடைபெறவிருந்தது.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும் தொடக்க வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, சமீபத்தில் உலகக்கோப்பையை வென்ற மிகப்பெரிய சந்தோஷத்தில் திளைத்தார்..
1976ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தியமகளிர் கிரிக்கெட் அணியால் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக ஒரு உலகக்கோப்பையை கூட வெல்லமுடியாத சூழல் தான் இருந்தது.. ஆனால் 2025 மகளிர் உலகக்கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மந்தனா, ஒன்பது இன்னிங்ஸ்களில் 434 ரன்கள் எடுத்து, உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.
இந்த நிலையில், இந்தியாவின் கனவுக்கோப்பையை வென்று கொடுத்த ஸ்மிருதி மந்தனா, அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் விதமாக தன்னுடைய காதலையும் வெளிப்படுத்தினார்.. திரைப்படத் தயாரிப்பாளரும் இசைக்கலைஞருமான பலாஷ் முச்சல் உடன் இருந்த காதலை ஸ்மிருதி மந்தனா வெளிப்படுத்த, இருவருக்கும் இடையேயான திருமணம் நவம்பர் 23ஆம் தேதியான இன்று நடைபெறவிருந்தது..
ஒத்திவைக்கப்பட்ட மந்தனா திருமணம்!
சமீபத்தில் உலகக் கோப்பை நடைபெற்ற மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் வைத்து ஸ்மிருதி மந்தனாவிற்கு புரோபோஷ் செய்த காதலர் பலாஷ் முச்சல் திருமணத்திற்கான ஒப்புதலை பெற்றார்.. தொடர்ந்து திருமணம் நிச்சயம் ஆனதை அணி வீரர்களுடன் வெளியிட்டு உறுதிசெய்தார் ஸ்மிருதி மந்தனா..
இந்தியாவின் பலவருட கனவான உலகக்கோப்பையும் கிடைச்சாச்சு, காதலர் உடனான திருமணமும் உறுதியாகியாச்சு என்ற இரட்டை மகிழ்ச்சியில் இருந்த ஸ்மிருதி மந்தனாவிற்கு நவம்பர் 23ஆம் தேதியான இன்று திருமணம் நடைபெறவிருந்தது..
இந்தசூழலில் ஸ்மிருதி மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாஸுக்கு உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஸ்மிருதியின் திருமணம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனை ஸ்மிருதியின் மேனேஜர் உஹின் மிஸ்ரா உறுதிப்படுத்தினார்.. காலையில் உணவருந்திக்கொண்டிருந்த போது ஹார்ட் அட்டாக் வந்ததாக சொல்லப்படுகிறது..

