4000 டி20 ரன்கள்.. உலகின் 2வது வீரர்.. வரலாறு படைத்தார் மந்தனா!
இந்திய மகளிர் அணியின் ஸ்மிருதி மந்தனா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 69 ரன்கள் அடித்து இந்திய அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடையச் செய்தார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
தொடரின் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், இலங்கை அணியை 8 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியது இந்திய அணி.
சாதனை படைத்த ஜெமிமா, ஸ்மிருதி
விசாகப்பட்டினத்தில் தொடங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஒட்டுமொத்தமாக இந்திய மகளிர் அணி சிறப்பாக பந்துவீசியது.
122 ரன்கள் அடித்தால் வெற்றி என களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா 25 ரன்கள் அடித்து வெளியேறினார். தொடர்ந்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10 பவுண்டரிகளை விளாசி 44 பந்தில் 69 ரன்கள் விளாசி வெற்றியை தேடித்தந்தார். 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் 25 ரன்கள் அடித்ததன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்களை கடந்தார் ஸ்மிருதி மந்தனா, இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை மற்றும் 2வது உலக வீராங்கனையாக சாதனை படைத்தார். முதலிடத்தில் 4716 ரன்களுடன் நியூசிலாந்து வீராங்கனை சுசி பேட்ஸ் நீடிக்கிறார்.
மேலும் இப்போட்டியில் இலங்கை அணிக்கு எதிராக 4வது டி20 அரைசதத்தை பதிவுசெய்தார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். இதன்மூலம் இலங்கைக்கு எதிராக அதிக அரைசதங்கள் அடித்த மிதாலி ராஜ் சாதனையை சமன்செய்தார் ஜெமிமா.

