யு19 ஆசியக்கோப்பை| சொதப்பிய மாத்ரே.. கைவிட்ட சூர்யவன்ஷி.. ஃபைனலில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா!
2025 யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா பாகிஸ்தானிடம் 191 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பாகிஸ்தான் வீரர் சமீர் மனாஸ் 172 ரன்கள் குவித்து அசத்தியதால், இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மாத்ரே மற்றும் சூர்யவன்ஷி சொதப்பியதால், இந்தியா வெறும் 156 ரன்களில் சுருண்டது.
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றது. இத்தொடரில் 8 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடப்பட்ட நிலையில், இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா ஆகிய அணிகள் ஏ பிரிவிலும், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாள் ஆகிய அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றன.
பரபரப்பாக நடந்த தொடரில் அபாரமாக விளையாடிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன. கோப்பைக்கு யாருக்கு என்ற இறுதிப்போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது.
பாகிஸ்தானிடம் தோற்ற இந்தியா..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில், தொடக்க வீரராக களமிறங்கிய சமீர் மனாஸ் 113 பந்தில் 17 பவுண்டரிகள் 9 சிக்சர்களை பறக்கவிட்டு 172 ரன்கள் குவித்தார். சமீரின் அபாரமான ஆட்டத்தால் 50 ஓவரில் 347 ரன்கள் குவித்தது.
348 ரன்கள் என்ற மிகப்பெரிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில், தொடக்க வீரர்களான ஆயுஸ் மாத்ரே மற்றும் சூர்யவன்ஷி இருவரும் களமிறங்கினர். இரண்டு பேரில் ஒருவராவது பெரிய இன்னிங்ஸ் விளையாடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்தநிலையில், ஆயுஸ் மாத்ரே மற்றும் சூர்யவன்ஷி இருவரும் மோசமான முறையில் வெளியேறினர். அதிலும் சூர்யவன்ஷி கொடுத்த கேட்ச்சை பாகிஸ்தான் வீரர்கள் தவறவிட்ட போதும், அதைப்பயன்படுத்திக்கொள்ளாத அவர் மீண்டும் பேட்டை சுழற்றி விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஜியார்ஜ், அபிக்யான் குண்டு, சௌகான் என யாருமே சோபிக்காத நிலையில் இந்திய அணி வெறும் 156 ரன்கள் மட்டுமே அடித்து சுருண்டது. சிறப்பாக பந்துவீசிய அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 191 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் அண்இ யு19 ஆசியக்கோப்பையை தட்டிச்சென்றது.

