'கிங் வரிசையில் பிரின்ஸ்..' கோலி மட்டுமே படைத்த சாதனை பட்டியலில் இணைந்த கில்!
இந்திய கேப்டனாக விராட் கோலி மட்டுமே படைத்த பிரத்யேக சாதனையை சுப்மன் கில்லும் படைத்து அசத்தியுள்ளார்.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் கேஎல் ராகுல், துருவ் ஜூரெல், ரவீந்திர ஜடேஜா 3 பேரும் சதமடித்து அசத்தினர். வெஸ்ட் இண்டீஸ் அணியை இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. அப்போது யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173 ரன்களும், கேப்டன் சுப்மன் கில் 20 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.
கோலியின் சாதனை பட்டியலில் இணைந்த கில்!
இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே யஷஸ்வி ஜெய்ஸ்வால் 175 ரன்களுக்கு ரன் அவுட்டாகி வெளியேறினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 16 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் தன்னுடைய 10வது டெஸ்ட் சதத்தை பதிவுசெய்து அசத்தினார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் சுப்மன் கில் 129* ரன்கள் அடிக்க, நிதிஷ் ரெட்டி 43 ரன்கள் மற்றும் துருவ் ஜூரெல் 44 ரன்கள் அடித்து அவுட்டாக 518/5 ரன்களில் இந்திய அணி டிக்ளார் செய்தது.
இந்தநிலையில் இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் 4 சதங்களை அடித்த சுப்மன் கில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் அடித்த சதத்தையும் சேர்த்து ஒரே ஆண்டில் இந்திய கேப்டனாக 5 டெஸ்ட் சதங்களை பதிவுசெய்து அசத்தினார்.
விராட் கோலி மட்டுமே இதற்கு முன்னர் இந்திய கேப்டனாக ஒரே ஆண்டில் (2017, 2018) 5 டெஸ்ட் சதங்களை அடித்திருந்த நிலையில், சுப்மன் கில் இரண்டாவது கேப்டனாக அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.