டிசம்பரில் 2026 ஐபிஎல் ஏலம்.. ரிலீஸாக போகும் பெரிய வீரர்கள்.. 5 பேரை வெளியேற்றும் CSK!
2026 ஐபிஎல் மினி ஏலமானது வரும் டிசம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ரீடெய்ன் செய்யப்படுவதற்கான தேதி குறித்த தகவலும் வெளியாகியுள்ளது.
2025 ஐபிஎல் தொடரானது பரபரப்பான இறுதிப்போட்டியுடன் முடிவுக்கு வந்தது. 18 வருடங்களாக கோப்பை வெல்லாத ஆர்சிபி அணி இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸை தோற்கடித்து முதல் கோப்பையை முத்தமிட்டது.
அதேநேரத்தில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் கடைசி இரண்டு இடத்தை பிடித்தன. சிஎஸ்கேவில் டெவால்ட் பிரேவிஸ் மற்றும் ஆயுஸ் மாத்ரே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்கள் தொடரின் இறுதியில் கண்டறியப்பட்ட நிலையில், 2026 ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் கம்பேக் செய்ய காத்திருக்கின்றன.
இந்த சூழலில் 2026 ஐபிஎல் ஏலத்திற்கான தேதி விவரம் வெளியாகியுள்ளது.
5 பேரை வெளியேற்றும் சிஎஸ்கே..
கிறிக்பஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையின் படி, 2026 ஐபிஎல் ஏலமானது டிசம்பர் 13-15ம் தேதிகளில் நடைபெறும் எனவும், ரீடெய்ன் செய்யப்படும் மற்றும் வெளியேற்றப்படும் வீரர்களின் பட்டியலை சமர்ப்பிக்க நவம்பர் 15ம் தேதி இறுதிநாளாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல கடந்த 2023 ஐபிஎல் ஏலம் மற்றும் 2024 ஐபிஎல் ஏலங்களை போன்று வெளிநாட்டில் நடைபெற வாய்ப்பில்லை என்றும், 2026 ஐபிஎல் ஏலம் இந்தியாவில் நடைபெறவே அதிகப்படியான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
இந்த சூழலில் சிஎஸ்கே அணி கான்வே உட்பட விஜய் ஷங்கர், ராகுல் திரிப்பாதி, சாம் கரன், தீபக் ஹூடா போன்ற 5 வீரர்களை வெளியேற்ற திட்டமிட்டிருப்பதாகவும், ராஜஸ்தான் அணியின் பட்டியலில் சஞ்சு சாம்சன் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இலங்கை ஸ்பின்னர்களான வனிந்து ஹசரங்கா மற்றும் தீக்ஷனா இருவரும் ஆர்ஆர் அணியிலிருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஏலத்தில் அதிகவிலைக்கு செல்லக்கூடிய வீரராக ஆஸ்திரேலியா ஆல்ரவுண்டர் கேம்ரூன் க்ரீன் இருப்பார் என்றும், அவருடன் மிட்செல் ஸ்டார்க், நடராஜன், ஆகாஷ் தீப், மயங்க் யாதவ், டேவிட் மில்லர் போன்ற வீரர்களும் ஐபிஎல் அணிகளின் கவனத்தை ஈர்ப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.