Asia cup 2025| கைகுலுக்காத இந்திய அணி வீரர்கள்.. கடுமையாகச் சாடிய பாகிஸ்தான்!
ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணி வீரர்கள் கைகுலுக்காததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் கடுமையாகச் சாடியுள்ளது.
இந்தியா வெற்றி.. கைகுலுக்காத வீரர்கள்!
8 அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் பலப்பரீட்சை நடத்தின. இதில், பாகிஸ்தான் நிர்ணயித்த 127 ரன்களை, இந்திய அணி வெகு விரைவாகவே எட்டிப்பிடித்து வெற்றிவாகை சூடியது. எனினும், இந்தப் போட்டிக்குப் பிறகு இந்திய வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுக்கு கைகுலுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்டத்திற்குப் பிறகு வழக்கமான கைகுலுக்கலுக்காக பாகிஸ்தான் வீரர்கள் காத்திருந்தபோது, இந்திய வீரர்கள் யாரும் மைதானத்தில் காணப்படவில்லை. மேலும் இந்திய அணியின் டிரஸ்ஸிங் அறையின் கதவை மூடும் காட்சிகளும்கூட காணப்பட்டன. அப்போது, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் மைக் ஹெசன் கை கொடுக்க இந்திய அணியின் அறை நோக்கிச் சென்றபோதும், இந்திய வீரர்கள் வெளியே வராமல் கை குலுக்க மறுத்ததால், பாகிஸ்தான் அணியினர் அதிருப்தியடைந்தனர். மறுபுறம், போட்டிக்குப் பிறகு பரிசளிப்பின்போதுகூட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா செல்லவில்லை. இதுவும் விமர்சனத்துக்குள்ளானது.
போட்டிக்கு முன்னதாக 'புறக்கணிப்பு' பற்றிய பேச்சுகள் இந்திய டிரஸ்ஸிங் அறைக்குள்கூட எதிரொலித்தன. கேப்டன் சூர்யகுமார் மற்றும் பலர் காம்பீர் மற்றும் துணை ஊழியர்களை அணுகி தங்கள் கவலைகளை தெரிவித்தனர். ஆனால் கம்பீரோ, ”உங்கள் வேலை இந்தியாவுக்காக விளையாடுவது. பஹல்காமில் என்ன நடந்தது என்பதை மறந்துவிடாதீர்கள். கைகுலுக்காதீர்கள். வெளியே சென்று, சிறந்ததைக் காட்டி, இந்தியாவுக்காக வெற்றி பெறுங்கள்” என்று அவர் அறிவுரை கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆயுதப்படை வீரர்களுக்குச் சமர்ப்பணம்
போட்டிக்குப் பிந்தைய பேட்டியில் சூர்யகுமார் யாதவ், ”பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த குடும்பங்களுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கிறோம்; நமது ஆயுதப்படை வீரர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிக்கிறோம்” என்று தெரிவித்தார்.
போட்டிக்குப் பிறகு பேசிய தலைமைப் பயிற்சியாளர் காம்பீர், “நல்ல வெற்றி. இந்தப் போட்டியில் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது. பஹல்காம் தாக்குதலின்போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் ஒற்றுமையைக் காட்டவும், அவர்கள் அனுபவித்தவற்றை வெளிப்படுத்தவும் நாங்கள் விரும்பியதால் இந்தப் போட்டி முக்கியமானது. மிக முக்கியமாக, வெற்றிகரமான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்காக இந்திய இராணுவத்திற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். நமது நாட்டை பெருமைப்படுத்தவும் மகிழ்ச்சியாகவும் மாற்ற முயற்சிப்போம்" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் வீரர்களுடனான அனைத்து நட்புறவுகளையும் புறக்கணிப்பது என்ற இந்திய அணியின் முடிவு, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் அரங்கில் ஒரு பெரிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாகக் கொல்லப்பட்ட பொதுமக்களைக் கௌரவிக்கும் வகையில், இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்கலைத் தவிர்த்தது, அந்த அணியினருக்கு ஏமாற்றத்தை அளித்தது. முன்னதாக, டாஸ் போடும்போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) ஓர் அறிக்கையில், ’டாஸின்போது கேப்டன் சல்மானை சூர்யகுமாருடன் கைகுலுக்க வேண்டாம்’ என்று போட்டி நடுவர் கேட்டுக் கொண்டதாகத் தெரிவித்துள்ளது. ’இந்தியாவின் இந்த முடிவு விளையாட்டுக்கு ஒவ்வாதது' என்று PCB எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சோயிப் அக்தர் கடுமையாக விமர்சனம்
மேலும் இந்திய அணியின் இந்தச் செயல்பாட்டை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “எனக்கு இதைப் பார்க்கவே வருத்தமாக இருக்கிறது. என்ன சொல்வது என்று தெரியவில்லை. இந்தியாவுக்கு வணக்கம். இந்த விஷயங்களை அரசியலாக்காதீர்கள். உங்களைப் பற்றி நாங்கள் நல்ல விஷயங்களைச் சொன்னோம். கைகுலுக்க வேண்டாம் என்பது பற்றி நாங்கள் நிறையச் சொல்லலாம். உங்கள் வீட்டிற்குள்ளும் சண்டைகள் நடக்கும். அதை மறந்துவிட்டு முன்னேற வேண்டும். இது கிரிக்கெட் விளையாட்டு, கைகுலுக்கி, உங்கள் கருணையைக் காட்ட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல்
முன்னதாக, ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். உலகையே அச்சுறுத்திய இந்தச் சம்பவம் தொடர்பாக, இரு நாடுகளுக்குள் விரிசல் ஏற்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்திய - பாகிஸ்தான் இருநாட்டு கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. ஐசிசி நடத்தும் தொடர்கள், அதுவும் 3வது நாட்டில் மட்டும் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில்தான் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறுமா என பலத்த எதிர்பார்ப்பு எழுந்தது. இது, இந்திய அரசியலிலும் பல எதிர்ப்புகளை உருவாக்கியது. உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், இவைகளுக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற போட்டி, தற்போது கைகுலுக்காத சர்ச்சையில் முடிந்துள்ளது.