ஆசியக் கோப்பை 2025.. துபாய் மண்ணில் இந்தியா vs பாகிஸ்தான்!
அனல் பறக்கும் துபாய் மண்ணில் கிரிக்கெட் மாமழை பெய்யவிருக்கிறது. கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பரமஎதிரிகளான இரு அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
1947ஆம் ஆண்டில் இரண்டுபட்ட இவ்விரு நாடுகளிலும் கிரிக்கெட்டையும், அரசியலையும் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தியா - பாகிஸ்தான் மோதும் ஒவ்வொரு போட்டியிலும் அனல் தகிப்பதையும், வீரர்களின் வெற்றி தாகத்தையும் உணர முடியும். உணர்வு, உணர்ச்சி, தேசப்பற்று, விளையாட்டு மாண்பு என இவ்விரு அணிகளுக்கு இடையே ஒவ்வொரு கணமும் பேசுபொருளாகும். இப்போது சொல்லவா வேண்டும். பஹல்காம் தாக்குதலுக்குப்பின் நடைபெறும் முதல் மோதல் இது. வரலாற்றுரீதியாக, இருபது ஓவர் போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக நடப்பு சாம்பியனான இந்திய அணி, ஆசியக் கோப்பையில் எட்டுக் கோப்பைகளை வென்று மிகவும் வெற்றிகரமான அணியாக உள்ளது.
விராட் இல்லை, ரோகித் இல்லை. ஆனாலும், இந்திய அணியின் பலம் சற்றும் குறையவில்லை. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணியில், சுப்மன் கில், ஜஸ்பிரித் பும்ரா, அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா போன்ற அனுபவமும், இளமையும் இணைந்த வீரர்கள் உள்ளனர். பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலைமையிலான பந்துவீச்சு, ஹர்திக் பாண்டியா, சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்களின் அதிரடி பேட்டிங் பலம் வாய்ந்தது. பாகிஸ்தான் அணியோ பாபர் அசாம், முகமது ரிஸ்வான் என இரு பெரும் வீரர்கள் இல்லாமல் களமிறங்குகிறது. சல்மான் அலி அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி சவாலைச் சந்திக்கக் காத்திருக்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் சிறப்பான வெற்றியை ஈட்டியிருக்கின்றன. இந்த நிலையில் கிரிக்கெட் அனலை பறக்கவிட இரு அணிகளும் தயாராகி நிற்கின்றன.