திறமையை நிரூபிக்கும் சஞ்சு சாம்சன்.. சண்டையிட்ட கவுதம் காம்பீர்.. பாக். வீரர் சொல்வது என்ன?
”சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என்பதற்காகக் கவுதம் கம்பீர் அனைவரிடமும் சண்டையிட்டார்” என பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். நடப்புத் தொடரில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகுதான் சஞ்சு சாம்சனுக்கு அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று உலகமே உற்றுநோக்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோத உள்ளன. இன்றைய போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் நிறைய சாதனைகளைப் படைக்கும். இந்த போட்டியில் இந்திய அணி வென்றால், டி20 உலகக்கோப்பையைத் தொடர்ந்து இரண்டுமுறை வென்ற முதல் நாடு, சொந்த மண்ணில் கோப்பையை வென்ற முதல் நாடு, டி20 உலகக்கோப்பையை 3 முறை கைப்பற்றிய அணி என மூன்று முத்தான சாதனைகளைப் படைக்கும். மாறாக, நியூசிலாந்து வெற்றிபெற்றால் முதல்முறையாக கோப்பையை வென்ற அணி என்ற சாதனையைப் படைக்கும்.
இந்த நிலையில், இறுதிப்போட்டியை முன்னிட்டு இந்திய அணியின் ஆடும் லெவன் குறித்து பலரும் தங்களது கருத்துகளை வைத்து வருகின்றனர். அதிலும் தொடர்ந்து சொதப்பி வரும் அபிஷேக் சர்மாவை மாற்ற வேண்டும் என இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் உள்ளிட்டோர் அணியை வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில், அணியில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் சஞ்சு சாம்சன் - கவுதம் காம்பீர் குறித்து பாகிஸ்தான் வீரர் சோயிப் அக்தர் கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. சஞ்சு சாம்சனுக்காக கவுதம் காம்பீர் சண்டையிட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், “கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்தே சஞ்சு சாம்சன் இந்திய கிரிக்கெட் வட்டத்தில் உள்ளார். ஆனால் தோனி, தினேஷ் கார்த்திக் போன்ற மூத்த விக்கெட் கீப்பர்கள் இருந்ததால், அவருக்குத் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இம்முறை நிலைமை வேறு. சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என்பதற்காகக் கவுதம் கம்பீர் அனைவரிடமும் சண்டையிட்டுள்ளார். ஆரம்பத்தில் உலகக் கோப்பைத் தொடருக்கான அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ஆனால், பயிற்சியாளர் கம்பீரின் கட்டாயத்தின் பெயரிலேயே அவர் அணியில் சேர்க்கப்பட்டார். அவரது தேர்வுக்காகக் கம்பீர் பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது" என அவர் தெரிவித்துள்ளார்.
நடப்புத் தொடரில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்தியா தோல்வியடைந்த பிறகுதான் சஞ்சு சாம்சனுக்கு அணியில் தொடர்ந்து விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. தனக்குக் கிடைத்த வாய்ப்பை அவர் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில், சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து அணியை வெற்றிபெற வைத்தார். அதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியிலும் 42 பந்துகளில் 89 ரன்கள் விளாசித் தனது திறமையை நிரூபித்தார். இந்தத் தொடரில் வெறும் 4 போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 232 ரன்களைக் குவித்துள்ளார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 200க்கும் மேல் உள்ளது.

