FIFER மூலம் அகர்கருக்கு செய்தி அனுப்பிய ஷமி.. 2 போட்டியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி அபாரம்!
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்குப் புறக்கணிக்கப்பட்ட முகமது ஷமி, ரஞ்சிக்கோப்பை தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி, தனது திறமையை நிரூபித்துள்ளார். அஜித் அகர்கரின் உடற்தகுதி குறித்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள ஷமி, தனது பந்துவீச்சு திறமையை வெளிப்படுத்தி, இந்திய அணியில் இடம் பெற தகுதியானவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் நட்சத்திர பவுலர் முகமது ஷமி இடம்பெறவில்லை. அவர் ஏன் இடம்பெறவில்லை? என்ற கேள்விக்கு, அவருடைய உடற்தகுதி குறித்த முழு அப்டேட் எங்களுக்கு கிடைக்கவில்லை என்ற பதிலை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறினார்.
ஆனால் அகர்கர் சொன்னது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முகமது ஷமி, நான் 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஐபிஎல் தொடர் மற்றும் துலீப் டிராபி என அனைத்திலும் விளையாடினேன். நான் பந்துவீச்சில் நல்ல டச்சில் தான் இருக்கிறேன். இதற்குமேல் என்ன செய்யவேண்டும். என்னை யாரும் தொடர்பு கொண்டு பேசவில்லை என்று காட்டமாக தெரிவித்தார்.
முகமது ஷமி பேசியதற்கு பதிலளித்திருந்த அகர்கர், ஷமி என்ன பேசினார் என்று நான் பார்க்கவில்லை.. நான் அவரிடம் இடையில் பேசிக்கொண்டுதான் இருந்தேன்.. அவர் இந்தியாவிற்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ளார், அவர் முழுமையாக தயாராக இருந்தால், அணியில் நிச்சயம் இடம்பெற்றிருப்பார் என்றும், நான் அவரை அழைத்து பேசுவேன் என்றும் தெரிவித்திருந்தார்..
15 விக்கெட்டுகளை வீழ்த்தி ஷமி அசத்தல்..
முகமது ஷமியின் எதிர்காலம் குறித்த பேச்சுக்கள் இணையத்தில் பரவலாக இருந்துவரும் சூழலில், ரஞ்சிக்கோப்பை தொடரில் 2 போட்டிகளில் ஒரு 5 விக்கெட் உட்பட 15 விக்கெட்டுகளை வீழ்த்தி தேர்வுக்குழுவின் சந்தேகத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார் ஷமி..
பெங்கால் அணிக்காக விளையாடும் முகமது ஷமி, உத்தரகாண்ட் அணிக்கு போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார். அதற்குபிறகு குஜராத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் 2வது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஷமி பெங்காலை 141 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு அழைத்துச்சென்றார்.. 2 போட்டிகளில் மொத்தமாக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்..
முழு உடற்தகுதி இல்லை என நிராகரித்த இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கருக்கு தான் இன்னும் சிறந்த டச்சில் இருப்பதாக நினைவூட்டல் அனுப்பியுள்ளார் ஷமி..

