”நான் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவன்..” - 174* ரன்கள் அடித்தபிறகு கருண் நாயர் பேச்சு!
8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கருண் நாயர், இங்கிலாந்து தொடரில் சாதிக்க முடியாமல் நீக்கப்பட்டார். தற்போது ரஞ்சிக்கோப்பையில் 174 ரன்கள் அடித்தபிறகு, அவர் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியானவர் என்று கூறினார். இந்திய அணியில் விளையாடுவது அவரது கனவு எனத் தெரிவித்தார்.
8 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்த கருண் நாயர், உள்நாட்டு கிரிக்கெட்டில் வெளிப்படுத்திய தன்னுடைய பிரைம் ஃபார்மை இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்த தவறினார்.. இங்கிலாந்து தொடரில் வெறும் ஒரு அரைசதம் மட்டுமே அடித்தபிறகு, இந்தியாவில் நடைபெற்ற அடுத்த வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலிருந்து கருண் நாயர் நீக்கப்பட்டார்..
2024 முதல் உள்நாட்டு கிரிக்கெட்டில் ரன்களை வாரிகுவித்தபோதும், கருண் நாயருக்கு தேர்வுக்குழு கருணை காட்டவில்லை. அவரை இந்திய அணியிலிருந்து நீக்கியது மட்டுமில்லாமல், இந்தியா ஏ அணியிலும் வாய்ப்பு கொடுக்காமல் அதிரடியாக செயல்பட்டது. அவருடைய நீக்கம் குறித்து பேசிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர், ’நாங்கள் கருண் நாயரிடமிருந்து நிறைய எதிர்ப்பார்த்தோம்’ என தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து பேசியிருக்கும் கருண் நாயர் ‘நான் அதிக வாய்ப்புகளுக்கு தகுதியுடையவன்’ என்று பேசியுள்ளார்..
இந்திய அணியிலிருந்து நீக்கியது ஏமாற்றமளிக்கிறது..
இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்கியதற்குபிறகு ரஞ்சிக்கோப்பையில் கர்நாடகா அணிக்காக இடம்பெற்றிருக்கும் கருண் நாயர், கோவா அணிக்கு எதிரான போட்டியில் 14 பவுண்டரிகள் 3 சிக்சர்களுடன் 174 ரன்கள்குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடைய அபாரமான ஆட்டத்திற்கு பிறகு கர்நாடகா வெற்றிபெறும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் கோவா போட்டியின் போது சதமடித்தபிறகு பேசிய கருண் நாயர், வெளிப்படையாக, இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டது மிகவும் ஏமாற்றமளிக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகள் என்னுடைய கடின உழைப்புக்கு பிறகு, நான் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அந்த ஒரு தொடரை விட அதிக வாய்ப்புகளுக்கு நான் தகுதியானவன்.
இந்திய அணியில் பலர் என்னை பற்றிய நல்ல உரையாடலை கொண்டிருந்தார்கள். அதையெல்லாம் நான் யோசிக்கிறேன். இதற்குபிறகு நீங்கள் என்ன செய்யமுடியும், இந்திய அணிக்காக விளையாடுவது மட்டுமே என்னுடைய இலக்கு. அது நடக்காதபோது விளையாடும் அணிக்கு வெற்றியைபெற சிறப்பாக விளையாட வேண்டும், அவ்வளவுதான்” என ஏமாற்றத்துடன் பேசினார்.

