ஷேன் வார்னே சாதனையை முறியடித்த தமிழர்.. பாகிஸ்தான் மண்ணில் சம்பவம்செய்த சேனுரான் முத்துசாமி!
தமிழக வம்சாவளியை சேர்ந்த தென்னாப்பிரிக்காவின் சேனுரான் முத்துசாமி பாகிஸ்தான் மண்ணில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென்னாப்பிரிக்கா அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வம்சாவளியைச் சேர்ந்த சேனுரான் முத்துசாமி 11 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
பாகிஸ்தான் மண்ணில் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடவிருக்கும் தென்னாப்பிரிக்கா அணி, தங்களுடைய முதல் டெஸ்ட் போட்டியை லாகூரில் விளையாடிவருகிறது.
11 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இமாம் உல் ஹக், சல்மான் ஆகா இருவரும் 93 ரன்கள் அடித்து அசத்தினர். சுழற்பந்துவீச்சில் அசத்திய இடது கை ஸ்பின்னரான சேனுரான் முத்துசாமி 117 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இது பாகிஸ்தான் மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் ஒரு வெளிநாட்டு ஸ்பின்னர் பதிவுசெய்த சிறந்த பந்துவீச்சாக பதிவுசெய்யப்பட்டது.
முன்னதாக 1994/95 தொடரில் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 6/136 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னேவை பின்னுக்கு தள்ளியுள்ளார் சேனுரான் முத்துசாமி.
தொடர்ந்து தங்களுடைய முதல் இன்னிங்ஸில் விளையாடிய தென்னாப்பிரிக்கா 269 ரன்னில் சுருண்டது. பாகிஸ்தான் அணியும் 2வது இன்னிங்ஸில் 167 ரன்னுக்கு ஆல் அவுட்டாக, 277 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா விளையாடிவருகிறது.
இதில் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸிலும் அற்புதமாக பந்துவீசைய சேனுரான் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மொத்தமாக 11 விக்கெட்டுகளை வீழ்த்திய சேனுரான், கடந்த 60 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது தென்னாப்பிரிக்க ஸ்பின்னராக புதிய சாதனையை படைத்துள்ளார்.
யார் இந்த சேனுரான் முத்துசாமி?
தென்னாப்பிரிக்காவின் இடது கை சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான சேனுரான் முத்துசாமி, தென்னாப்பிரிக்காவில் பிறந்திருந்தாலும் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்.
31 வயதாகும் சேனுரானின் குடும்பம் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் சேனுரான் தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர், இருப்பினும் அவர் இரண்டு முறை தமிழகத்திற்கு வருகைபுரிந்து தனது தொலைதூர உறவினர்களைச் சந்தித்துள்ளார். அவர்கள் இன்னும் நாகப்பட்டினத்தில் வசித்துவருகின்றனர்.
2013 முதல் தென்னாப்பிரிக்காவிற்காக முதல் தர கிரிக்கெட்டை விளையாடிவரும் சேனுரான், பந்துவீச்சில் 262 விக்கெட்டுகளையும், பேட்டிங்கில் 9 சதங்களுடன் 30 அரைசதங்களையும் அடித்து 5111 ரன்களை குவித்துள்ளார்.
தன்னுடைய அபாரமான ஆல்ரவுண்ட் திறமையை வெளிப்படுத்திய சேனுரான் முத்துசாமிக்கு 2019-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சர்வதேச அறிமுகம் கிடைத்தது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்ற சேனுரான், தன்னுடைய முதல் விக்கெட்டாக விராட் கோலியை வெளியேற்றி சிறந்த தொடக்கத்தை பெற்றார்.