500 விக்கெட்டா..!! ஒரே போட்டியில் 2 உலக சாதனை.. வரலாறு படைத்த ஷாகிப் அல் ஹசன்!
500 டி20 விக்கெட்டுகள் வீழ்த்திய ஷாகிப் அல் ஹசன், முதல் சர்வதேச பவுலராக உலக சாதனை படைத்துள்ளார்.
ஷாகிப் அல் ஹசனை வங்கதேச அணியின் ஜாம்பாவான் வீரர் என்று மட்டும் சொல்லாமல், உலக கிரிக்கெட் ஜாம்பவான் வீரர்களில் ஒருவர் என்று தான் சொல்லவேண்டும். 2006-ம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தலைசிறந்த வீரராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.
உலக கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஜேக் காலிஸ், பிளிண்டாஃப், சனத் ஜெயசூர்யா, கபில்தேவ், ரவி சாஸ்திரி முதலிய ஜாம்பவான் வீரர்கள் வரிசையில் ஷாகிப் அல் ஹசன் என்ற பெயரும் நிச்சயம் இடம்பெற்றிருக்கும்.
கிரிக்கெட்டில் சிறந்த ஆல்ரவுண்டராக உச்சம் தொட்ட ஷாகிப் அல்ஹசன், தற்போது டி20 கிரிக்கெட்டில் புதிய உலக சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.
உலக சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசன்..
கரீபியன் பிரீமியர் லீக்கில் பங்கேற்றுள்ள ஷாகிப் அல் ஹசன், ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஃபால்கன்ஸ் அணிக்காக விளையாடுகிறார். இந்நிலையில் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய ஆல்ரவுண்ட் திறனை வெளிப்படுத்திய ஷாகிப், டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் என்ற மைல்கல் சாதனையை படைத்துள்ளார்.
11 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய அவர், விரைவாக 25 ரன்களை அடித்து அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை தேடிக்கொடுத்தார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இடதுகை பவுலர் என்ற உலக சாதனையும், ரஷித் கான், டுவைன் பிராவோ, சுனில் நரைன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோருக்கு பிறகு 5வது சர்வதேச பவுலராகவும் சாதனை படைத்தார்.
அதுமட்டுமில்லாமல் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 7000 ரன்கள் + 500 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் பவுலர் என்ற உலக சாதனையும் படைத்துள்ளார் ஷாகிப் அல் ஹசன்.