விடைபெற்றார் 'The Wall 2.O' புஜாரா.. அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவிப்பு!
அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் புஜாரா ஓய்வு
ஆஸ்திரேலியா மண்ணில் BGT தொடர்களை வெல்ல காரணமானவர் புஜாரா
நம்பர் 3 டெஸ்ட் வீரராக டிராவிட்டுக்கு மாற்று வீரராக ஜொலித்தவர் புஜாரா
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தவிர்க்கமுடியாத ஒரு இடத்தை பிடித்திருந்தவர் சட்டீஸ்வர் புஜாரா. விராட் கோலி அணியில் இருந்த போதும் கூட, மற்ற ஜாம்பவான் அணிகள் புஜாராவின் விக்கெட்டை எதிர்நோக்கும் வகையில் ஒரு ஜாம்பவான் டெஸ்ட் வீரராகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆஸ்திரேலியா மண்ணில் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட் தொடரை வென்றபோது கூட, புஜாராதான் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்திருந்தார்.
இரண்டாவது முறை ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா சென்ற போது, “கடந்தமுறை புஜாராவை எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் இந்தமுறை அவருக்காக தனி பிளான் வைத்திருக்கிறோம்” என தற்போதைய ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்திருந்தார். அந்தவகையில் ஒரு திறமையான வீரராக இருந்தவரை, 2022 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு பிறகு இந்திய அணியிலிருந்து வெளியேற்றியது நிர்வாகம். இறுதிப்போட்டியில் அவர் 14 மற்றும் 27 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது குற்றச்சாட்டாக வைக்கப்பட்டது.
ஆனால் ஒரு வீரர்கள் கூட சரியாக பேட்டிங் செய்யாத நிலையில், அவரை மட்டும் வஞ்சிப்பது எந்தவகையில் நியாயம் என பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினாலும் இந்திய அணி அவரை நீக்கியதில் உறுதியாக இருந்தது. அவருக்கு பதிலாக சுப்மன் கில்லை 3வது இடத்தில் களமிறக்கிய இந்தியா, புஜாராவிற்கான இடம் அணியில் இல்லை என்பதை உறுதிசெய்தது.
இந்நிலையில் வாய்ப்புக்காக காத்திருந்த புஜாரா, உள்ளூர் போட்டிகளில் ரன்களை குவித்தாலும் தற்போதைய இந்திய அணியில் அவருக்கான இடம் இல்லை என்பது தெரியவந்தது. இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட் மட்டுமில்லாமல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார் சட்டீஸ்வர் புஜாரா.
ஓய்வை அறிவித்த புஜாரா..
டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு என்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் புஜாரா. டிராவிட்டிற்கு பிறகு இந்திய அணியின் மற்றொரு சுவர் என போற்றப்படும் வகையில் அவர் தன்னுடைய இடத்தை இந்திய அணியில் பிடித்திருந்தார்.
ஒருநாள் கிரிக்கெட்டில் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய புஜாரா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 43.60 சராசரியுடன் 7195 ரன்கள் அடித்துள்ளார். இதில் 19 சதங்களும், 35 அரைசதங்களும் அடங்கும்.
அதுமட்டுமில்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் 11 போட்டிகளில் விளையாடி 47 சராசரியுடன் 993 ரன்கள் குவித்துள்ளார். அதில் 3 சதங்களும், 5 அரைசதங்களும் அடங்கும்.
அதுமட்டுமில்லாமல் இந்திய முதல்தர கிரிக்கெட்டில் அதிகரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட்டுக்கு பிறகு 20,000 ரன்கள் குவித்த 4வது இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார்.
இந்தசூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து புஜாரா ஓய்வை அறிவித்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.