ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 500 பந்துகளுக்கு மேல் சந்தித்த ஒரே இந்திய வீரர் சட்டீஸ்வர் புஜாரா. 2017-ம் ஆண்டு ராஞ்சி டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 525 பந்துகளில் 202 ரன்கள் எடுத்து அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
அந்த போட்டியில் புஜாரா தனது இரட்டை சதத்தை அடிக்க 672 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். 38.47 ஸ்ட்ரைக்ரேட்டில் 21 பவுண்டரிகள் அடித்தார். 11 இந்தியர்கள் 400+ பந்துகளை மட்டுமே எதிர்கொண்டாலும், புஜாராவைத் தவிர வேறு யாரும் 500 பந்துகளை ஒரு இன்னிங்ஸில் கடக்கவில்லை.
புஜாராவுக்கு அடுத்த இரண்டாவது இடத்தில் ஒரு இன்னிங்ஸில் ராகுல் டிராவிட் 495 பந்துகளை சந்தித்து நீடிக்கிறார்.
இது ஒரு தனித்துவமான சாதனையாகும், இதை முறியடிப்பது என்பது முடியாத ஒன்றாகவே இருக்கப்போகிறது. ஒரு டெஸ்டின் ஐந்து நாட்களிலும் பேட்டிங் செய்த வீரர்கள் 13 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களில் 75 ரன்களுக்குக் குறைவாக எடுத்த ஒரே வீரர் புஜாரா மட்டுமே.
அதாவது டெஸ்ட் போட்டியின் 5 நாட்களிலும் பேட்டிங் செய்து 74 ரன்கள் மட்டுமே புஜாரா அடித்தார். அவரைத்தவிர ஒரு வீரர் கூட 5 நாட்கள் பேட்டிங் செய்து அதற்கும் குறைவாக அடித்ததில்லை. இலங்கைக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களில் 52, 22 ரன்கள் அடித்தார்.
புஜாரா முதல் தர கிரிக்கெட்டில் விளையாடி 18 இரட்டை சதங்களை அடித்துள்ளார். டான் பிராட்மேன், வாலி ஹாமண்ட் மற்றும் பாட்ஸி ஹென்ட்ரன் ஆகியோருக்குப் பிறகு இது நான்காவது சிறந்த எண்ணிக்கையாகும். இது இந்தியா வீரர்களில் ஒருவரால் அடிக்கப்பட்ட அதிகபட்ச இரட்டை சதங்களாகும்.
இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் விஜய் மெர்ச்சன்ட் 11 இரட்டை சதங்களுடன் வெகு தொலைவில் இருக்கிறார். புஜாராவின் இந்த சாதனையை இந்திய கிரிக்கெட்டில் யாராவது முறியடிக்க முடியும் என்று நினைத்துப் பார்க்கவே முடியாது.