27 பந்தில் அரைசதமடித்த ஷபாலி வெர்மா.. இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி வெற்றி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 27 பந்தில் அரைசதமடித்த ஷபாலி வெர்மாவின் அதிரடி ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சாமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்த இந்திய மகளிர் அணி, 5 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற்றது.
27 பந்தில் அரைசதமடித்த ஷபாலி..
பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை மகளிர் அணி 128/9 ரன்கள் மட்டுமே அடித்தது. சிறப்பாக பந்துவீசிய ஸ்ரீ சரணி 4 ஓவரில் 23 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
129 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய இந்திய அணி 11.5 ஓவரிலேயே 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 129 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. அதிரடியாக பேட்டிங் செய்த தொடக்க வீராங்கனை ஷபாலி வெர்மா 27 பந்தில் அரைசதமடித்து 34 பந்தில் 69 ரன்கள் விளாசினார்.

