T20I | ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள்.. இந்தோனேசியா வீரர் உலகசாதனை!
இந்தோனேசியா பவுலர் கெடே பிரியந்தனா, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரராக உலக சாதனை படைத்துள்ளார். கம்போடியா அணிக்கு எதிரான போட்டியில், 16வது ஓவரில் 3 பந்துகளில் ஹாட்ரிக், மேலும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்றில் இடம்பிடித்தார்.
சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் சில அபூர்வ சாதனைகளை எல்லாம் குட்டி குட்டி கிரிக்கெட் நாட்டின் வீரர்களே வைத்துள்ளனர். உதாரணத்திற்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம் அடித்த வீரராக நேபாளத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரரே உள்ளார்.
2007ஆம் ஆண்டு யுவராஜ் சிங் படைத்திருந்த 12 பந்தில் அரைசதம் என்ற உலகசாதனையை, கடந்த 2023ஆம் ஆண்டு நேபாள் வீரர் திபேந்திர சிங் 9 பந்தில் அரைசதமடித்து முறியடித்தார்.
அந்தவகையில் தற்போது ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலும் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளராக உலக சாதனை படைத்துள்ளார் இந்தோனேசியா பவுலர் கெடே பிரியந்தனா.
வரலாற்றில் முதல்வீரராக உலகசாதனை!
இந்தோனேசியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள கம்போடியா கிரிக்கெட் அணி, 8 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலிரண்டு போட்டிகள் இன்று ஒரே நாளில் நடைபெற்றன.
பரபரப்பாக நடைபெற்ற முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசியா அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்கள் குவித்தது. அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தோனேசியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தர்மா கேசுமா 68 பந்துகளில் 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் விளாசி 110 ரன்கள் குவித்தார்.
168 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிய கம்போடியா அணி, 15 ஓவர்கள் முடிவில் 106 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 16வது ஓவரை வீசிய கெடே பிரியந்தனா முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்டை வீழ்த்தி ஹாட்ரிக் பதிவுசெய்தார். அடுத்தபந்து டாட்பாலாக மாற, 5வது பந்தில் விக்கெட் வீழ்த்திய கெடே, 6வது பந்தை ஒயிடு பாலாக வீசினார். பின்னர் கடைசி பந்திலும் விக்கெட்டை வீழ்த்திய அவர், ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாறு படைத்தார். இந்தப்போட்டியில் கெடே இந்த ஒரு ஓவரை மட்டுமே வீசினார்.

