இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்ற பாகிஸ்தான் U19 அணி.. ஒவ்வொரு வீரருக்கும் தலா 1 கோடி அறிவிப்பு!
2025 யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், வெற்றி பெற்ற ஒவ்வொரு வீரருக்கும் தலா 1 கோடி பரிசு அறிவித்தார். இஸ்லாமாபாத்தில் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
2025 யு19 ஆசியக்கோப்பை தொடர் துபாயில் நடைபெற்றது. இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ, மலேசியா, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை, நேபாள் ஆகிய 8 அணிகள் இடம்பெற்று விளையாடின. தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றன.
கடந்த ஞாயிற்று கிழமை துபாயில் நடைபெற்ற பரபரப்பான இறுதிப்போட்டியில் 347 ரன்கள் குவித்த பாகிஸ்தான் அணி, ஆயுஸ் மாத்ரே, சூர்யவன்ஷி அடங்கிய இந்திய அணியை 156 ரன்களுக்கு சுருட்டி 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை தட்டிச்சென்றது.
ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி அறிவிப்பு
இந்தியாவை யு19 ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் தோற்கடித்து கோப்பை வென்ற பாகிஸ்தான் வீரர்களுக்கு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. பாகிஸ்தானின் சீனியர் அணிக்கு கொடுக்கப்படுவது போல மைதானத்தில் ரசிகர்கள் கூடியிருந்து வாழ்த்து கோஷம் எழுப்பினர்.
இந்தசூழலில் இந்தியாவை வீழ்த்தி கோப்பை வென்ற பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், அணியில் இடம்பெற்ற ஒவ்வொருவருக்கும் தலா 1 கோடி (இந்திய ரூபாய் மதிப்பில் 32 லட்சம்) பரிசுத் தொகையை அறிவித்துள்ளார்.
அணியின் வெற்றிகுறித்து பேசிய பாகிஸ்தான் யு19 அணியின் பயிற்சியாளரான முன்னாள் வீரர் சர்பராஸ் அகமது, ஒருநாள் வடிவத்தை எப்படி விளையாடவேண்டும் என உள்ளூர் கிரிக்கெட்டில் 20 வீரர்களுக்கும் முறையாக பயிற்சி வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

