பேட்டிங், பௌலிங் இரண்டிலும் அசத்திய மிட்செல் சான்ட்னர்..!

என்னுடைய சிறப்பான செயல்பாட்டை நான் வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது
Santner
SantnerKunal Patil

2023 ஐசிசி உலகக் கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் ஆட்ட நாயகன் விருது பெறும் வீரர்களின் பெர்ஃபாமன்ஸ் பற்றிய தொடர் இது!

போட்டி 6: நியூசிலாந்து vs நெதர்லாந்து
முடிவு: 99 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி (நியூசிலாந்து - 322/7; நெதர்லாந்து - 223 ஆல் அவுட், 46.3 ஓவர்கள்)
ஆட்ட நாயகன்: மிட்செல் சான்ட்னர் (நியூசிலாந்து)
பேட்டிங்: 17 பந்துகளில் 36 ரன்கள். 3 போர்கள், 2 சிக்ஸர்கள்
பௌலிங்: 10-0-59-5

சென்னை சூப்பர் கிங்ஸும் நியூசிலாந்துக்குமான பந்தம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. சூப்பர் கிங்ஸுக்காக பல நியூசிலாந்து வீரர்கள் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். 2009 முதல் யெல்லோ ஆர்மியின் பயிற்சியாளராக இருக்கும் முன்னாள் நியூசிலாந்து கேப்டன் ஸ்டீஃபன் பிளெமிங் சிஎஸ்கேவுக்கு 5 ஐபிஎல் கோப்பைகள் வென்றுகொடுத்திருக்கிறார். ஓப்பனர் டெவன் கான்வேவை சென்னை ரசிகர்கள் மைக் ஹஸ்ஸி 2.0 என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நியூசிலாந்து அணியின் இந்த உலகக் கோப்பை பயணித்தில் சிஎஸ்கே வீரர்கள் தான் மிகப் பெரிய தாக்கம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். முதல் போட்டியில் கான்வே 152 ரன்கள் விளாசியிருந்த நிலையில், இந்தப் போட்டியில் ஆல்ரவுண்டராக அசத்தி ஆட்ட நாயகனாகவும் உருவெடுத்திருக்கிறார் மிட்செல் சான்ட்னர்.

பேட்டிங்

சான்ட்னர் களத்துக்கு வந்தபோது 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் (44.1 ஓவர்கள்) என்ற நல்ல நிலையில் தான் இருந்தது நியூசிலாந்து. இருந்தாலும் முந்தைய சில ஓவர்களாக விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ்ந்துகொண்டே இருந்தன. கடைசி 24 பந்துகளில் 16 ரன்கள் மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது நியூசிலாந்து. அதனால் அந்த அணி 300 ரன்களைக் கடப்பதற்குள் ஆல் அவுட் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. ஆனாலும் அதையெல்லாம் பெரிதாக பொருட்படுத்திக்கொள்ளாமல் மிகவும் கூலாக ஆடினார் சான்ட்னர்.

தான் சந்தித்த இரண்டாவது பந்திலேயே ஃபோர் அடித்த அவர், அதன்பிறகு சிறப்பாக ஸ்டிரைக்கை ரொடேட் செய்தார். தன் நான்காவது பந்து முதல் பத்தாவது பந்து வரை தொடர்ந்து 7 சிங்கிள்கள் எடுத்தார். ஒரு பந்தைக்கூட வீணடிக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் அவர். வேன் மீக்ரன் வீசிய 48வது ஓவரின் கடைசிப் பந்தில் ஃபோர் அடித்து அணியின் ஸ்கோரை 289 ஆக உயர்த்தினார். அதன்பிறகு அவருக்குக் கடைசி ஓவரில் தான் ஸ்டிரைக் கிடைத்தது. முதல் பந்தையே ஃபோருக்கு அனுப்பிய அவர், இரண்டாவது பந்திலும் நான்காவது பந்திலும் சிங்கிள் எடுத்தார். அதன்பிறகு கடைசி பந்தில் ஸ்டிரைக் வந்தவருக்கு ஒரு பெரும் போனஸ் கிடைத்தது. கடைசிப் பந்தில் பாஸ் டி லீட் நோ பாலாக வீசினார். அந்தப் பந்தை சிக்ஸருக்கு விளாசிய சான்ட்னருக்கு இன்னொரு பந்தும் இலவசமாகக் கிடைத்தது. ஃப்ரீ ஹிட்டான அந்தப் பந்தையும் சிக்ஸராக்கி இன்னிங்ஸை சிறப்பாக முடித்து வைத்தார். 17 பந்துகள் சந்தித்த சான்ட்னர் தன் முதல் பந்தை மட்டுமே டாட் ஆக்கினார். அதன்பிறகு ஒரு பந்தைக் கூட அவர் வீணடிக்கவில்லை.

பௌலிங்

நெதர்லாந்து இன்னிங்ஸின் எட்டாவது ஓவரில் பந்துவீச வந்த சான்ட்னர், தன் இரண்டாவது ஓவரிலேயே முதல் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் சற்று வேகமாக பந்துவீச, அதன் வேகத்தை கணிக்க முடியாமல் எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார் மேக்ஸ் ஓ'டௌட். ஆனால் அடுத்த சில ஓவர்கள் சான்ட்னருக்கு சிறப்பாகச் செல்லவில்லை. காலின் அகர்மேன், தேஜா நிதாமனாரு இருவரும் அவரை சிறப்பாகக் கையாண்டார்கள். அவரது ஐந்தாவது ஓவரில் மட்டும் 15 ரன்கள் எடுத்தனர். ஆனால் தன்னுடைய அடுத்த ஓவரிலேயே அந்த ஜோடியை வெளியேற்றினார் சான்ட்னர். ஸ்விட்ச் ஹிட் அடிக்க முயன்ற அவர் சரியாக பந்தை அடிக்காமல் மேட் ஹென்றியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

Santner
இந்தியாவுக்கு பாக் என்றால், பாகிஸ்தானுக்கு இலங்கை... முதல் முறையாக பாகிஸ்தான் வீழ்த்தப்படுமா..!

சான்ட்னரின் ஏழாவது ஓவரில் நெதர்லாந்து கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் சான்ட்னரை டார்கெட் செய்து அடித்தார். நான்கு பந்துகளில் 12 ரன்கள் எடுத்தார் அவர். ஆனால் சான்ட்னர் மனம் தளரவில்லை. இந்த முறையும் தன் வேகத்தை மாற்றி பேட்ஸ்மேனை அவர் ஏமாற்ற, சான்ட்னரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார் எட்வர்ட்ஸ். அவர் வீசிய அடுத்த இரு ஓவர்களிலும் தலா 1 விக்கெட் கிடைத்தது. ரயான் கிளெய்னை வீழ்த்தி தன் 5 விக்கெட் ஹாலை நிறைவு செய்தார் அவர்.

ஆட்ட நாயகன் என்ன சொன்னார்?

"இன்னிங்ஸின் தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய வீரர்களைப் பாராட்டவேண்டும். மிடில் ஆர்டரில் சிறு சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் எப்படியோ 320 ரன்களைக் கடந்துவிட்டோம். இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீசுவது சற்று சிரமமாக இருந்தது. இருந்தாலும்,சிறப்பாகப் பந்துவீசி அவர்களைக் கட்டுப்படுத்திவிட்டோம். என்னுடைய சிறப்பான செயல்பாட்டை நான் வெளிப்படுத்தவில்லை. இருந்தாலும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது"

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com