
போட்டி 8: பாகிஸ்தான் vs இலங்கை
மைதானம்: ராஜிவ் காந்தி இன்டர்நேஷனல் ஸ்டேடியம், உப்பல், ஹைதராபாத்
போட்டி தொடங்கும் நேரம்: அக்டோபர் 8, மதியம் 2 மணி
உலகக் கோப்பை என்றாலே நாம் எப்போதும் இந்தியா - பாகிஸ்தான் ரைவல்ரியைப் பற்றித்தான் பேசுவோம். இந்தியாவுக்கு எதிராக இன்னும் பாகிஸ்தான் வெற்றி பெறாததைப் பற்றிப் பேசுவோம். 50 ஓவர் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளிலும் இந்தியா வென்றிருக்கிறது. ஆனால் அதிகம் பேசப்படாத ஒரு விஷயம், அதே 7-0 என்ற ரெக்கார்டை இலங்கைக்கு எதிராக வைத்திருக்கிறது பாகிஸ்தான். இந்த இரு அணிகளும் மோதிய 8 போட்டிகளில், பாகிஸ்தான் ஏழில் வென்றிருக்கிறது. 2019 உலகக் கோப்பை போட்டி மழையால் கைவிடப்பட்டது. இந்த முறையாவது வெற்றி பெற்று இந்தத் தோல்விப் பயணத்துக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் இருக்கிறது இலங்கை.
பாகிஸ்தான்: முதல் போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிராக 81 ரன்களில் வெற்றி பெற்றது பாகிஸ்தான். ஆரம்பத்தில் பேட்டிங்கில் தடுமாறினாலும் அதன் பிறகு மீண்டெழுந்து 286 ரன்கள் எடுத்தது அந்த அணி. பந்துவீச்சில் அந்த அணி எப்போதும்போல் ஆதிக்கம் செலுத்தி வெற்றி கண்டது. புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது அந்த அணி.
இலங்கை: நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தங்கள் முதல் போட்டியில் அடிவாங்கியிருக்கிறது இலங்கை. அந்த அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்து உலகக் கோப்பை வரலாற்றின் அதிகபட்ச ஸ்கோரான 428 ரன்களைப் பதிவு செய்தது அந்த அணி. அதை சேஸ் செய்த இலங்கை 326 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி 102 ரன்களில் படுதோல்வி அடைந்தது. அதனால் புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது அந்த அணி.
பாகிஸ்தான் அணியைப் பொறுத்தவரை அந்த அணியின் டாப் ஆர்டர் தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருக்கிறது. இமாம் உல் ஹக், ஃபகர் ஜமான் இருவரும் முன்பைப் போல் ரன் குவிக்கத் தடுமாறுகிறார்கள். கடைசி 11 இன்னிங்ஸ்களில் அதிகப்ட்சமாக 33 ரன்களே எடுத்திருக்கிறார் ஜமான். நெதர்லாந்துக்கு எதிராகவும் இருவரும் இணைந்து 27 ரன்களே எடுத்தனர். இது கேப்டன் பாபர் ஆசம் மீதும், அந்த அணியின் மிடில் ஆர்டர் மீதும் அதீத நெருக்கடியை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், இந்த பிரச்சனையிலிருந்து தங்கள் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீண்டு வருவார்கள் என்று கூறியிருக்கிறார் பாகிஸ்தான் தலைமைப் பயிற்சியாளர் கிரான்ட் பிராட்பர்ன்.
இதுபற்றி போட்டிக்கு முன்பு பேசிய அவர், "எங்கள் அணியின் டாப் ஆர்டர் கிளிக் ஆகவில்லை என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் பவர்பிளேவில் விளையாடக்கூடிய எங்கள் வீரர்கள் மீது நாங்கள் அளவுகடந்த நம்பிக்கை வைத்திருக்கிறோம். இதற்கு முன்பும் அவர்கள் இதுபோன்ற சரிவிலிருந்து மீண்டு வந்திருக்கிறார்கள்" என்று கூறினார். பாகிஸ்தான் அணிக்கு டாப் ஆர்டர் தான் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. மற்ற வீரர்கள் ஓரளவு நம்பிக்கை தரக்கூடிய செயல்பாட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
இலங்கை அணி கடந்த போட்டியில் பெரும் அடி வாங்கியிருக்கிறது. காயம் காரணமாக முன்னணி ஸ்பின்னர் தீக்ஷனா அந்தப் போட்டியில் ஆடாமல் இருந்தார். ஆனால் இந்தப் போட்டிக்கு முன் அவர் முழு உடல் தகுதி பெற்றிருப்பதாகவும், பாகிஸ்தானுக்கு எதிராக அவர் விளையாடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருப்பது. அது இலங்கை அணிக்கு மிகப் பெரிய பலம். பந்துவீச்சில் சொதப்பியிருந்தாலும், அந்த அணியின் பேட்டிங் ஓரளவு நம்பிக்கை கொடுப்பதாகவே இருந்தது. குஷல் மெண்டிஸ், சரித் அசலன்கா, தசுன் ஷனகா என மூன்று வீரர்கள் அதிர்டி அரைசதம் அடித்தனர். ஆனால் பலம் வாய்ந்த பாகிஸ்தான் பந்துவீச்சுக்கு எதிராக பேட்டிங் எளிதாக இருக்காது. அதனால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் கவனமாகவும் ஆடியாகவேண்டும்.
போட்டி நடக்கும் உப்பல் ஸ்டேடியம் பேட்டிங்குக்கு சாதகமான ஒன்று. நெதர்லாந்துக்கு எதிரான முந்தைய போட்டியில் நியூசிலாந்து அணி 322 அணிகள் குவித்தது. இந்தப் போட்டியிலும் முதலில் பேட்டிங் செய்யும் அணி நிச்சயம் 300 ரன்களைக் கடக்கும். பாகிஸ்தான் ஏற்கெனவே இந்த மைதானத்தில் விளையாடியிருப்பது அவர்களுக்கு சாதகமாக இருக்கக்கூடும்.
பாகிஸ்தான் - பாபர் ஆசம்: முதல் போட்டியில் சற்று தடுமாறிவிட்டாலும், உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனை குறைத்து மதிப்பிட முடியாது. நிச்சயம் இலங்கைக்கு அவர் சிம்மசொப்பனமாக இருப்பார்.
இலங்கை - குஷல் மெண்டிஸ்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மெண்டிஸ் ஆடிய விதத்திலேயே பாகிஸ்தான் பௌலர்களை அனுகினால், நிச்சயம் அவர்களை பின்தங்கவைக்க முடியும். அதுதான் அவர்களின் வெற்றிக்கான சூத்திரமாகவும் இருக்கும்.