’21 முறை டக்அவுட்..’ கம்பீர் சொன்ன வார்த்தை என் நம்பிக்கையை உயர்த்தியது! - சஞ்சு சாம்சன்
30 வயது இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சு சாம்சன் 2015-ம் ஆண்டு சர்வதேச டி20 அறிமுகத்தை பெற்றபிறகு, 6 ஆண்டுகளுக்கு பிறகு தான் 2021-ல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகத்தை பெற்றார். இதற்கு இடைப்பட்ட காலங்களில் இந்திய அணிக்குள் உள்ளே வருவதுமாய், வெளியே செல்வதுமாய் இருந்த சஞ்சு சாம்சனுக்கு நிரந்தர வாய்ப்பு என்பது கிடைக்காமலே இருந்தது.
சிறந்த திறமையான வீரராக இருந்தபோதும் அவருக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போது, இந்திய ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக கருத்துகளை வெளியிட தவறியதில்லை. ஒவ்வொரு முறை சஞ்சு சாம்சனுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படும்போதெல்லாம், பிசிசிஐயை விமர்சித்த ரசிகர்கள், மைதானத்திற்கும் நேரடியாக அவருடைய புகைப்படத்தை பதாகைகளில் கொண்டுசென்று ஆதரவை காட்டினர்.
இந்நிலையில் கவுதம் கம்பீர் தலைமையில் சூர்யகுமார் டி20 கேப்டன்சியை எடுத்துக்கொண்ட பிறகு, சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரராக நீண்ட வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் 2 போட்டிகளில் அடுத்தடுத்து 0 ரன்னில் வெளியேறினார் சஞ்சு சாம்சன்.
இந்த சூழலில் விரக்தியில் அமர்ந்திருந்த சஞ்சு சாம்சனிடம் வந்து பேசிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தன்னுடைய நம்பிக்கையை உயர்த்தியதாக சஞ்சு பேசியுள்ளார்.
21 முறை டக்அவுட் ஆனால்தான்..
இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் யூடியூப் சேனலில் ‘குட்டி ஸ்டோரி’ என்ற நிகழ்ச்சியில் பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், தலைமை பயிற்சியாளர் கவுதம் கொடுத்த நம்பிக்கை குறித்து பேசினார்.
இலங்கைக்கு எதிராக நடந்த 2 போட்டியில் டக் அவுட் ஆனபிறகு என்ன நடந்தது என்று பேசியிருக்கும் சஞ்சு சாம்சன், “நான் டிரஸ்ஸிங் ரூமில் மனச்சோர்வுடன் அமர்ந்திருந்தேன். கவுதம் பாய் அதைக் கவனித்தார். என்னிடம் வந்த அவர், என்ன நடந்தது? என்று கேட்டார். நான் அவரிடம் இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன, ஆனால் இரண்டிலும் ரன் அடிக்காமல் கோட்டைவிட்டுவிட்டேன் என்று கூறினேன். அதற்கு அவர், ’அதனால் என்ன?' என்று மட்டும் சொன்னார். பின்னர், 'நீங்கள் 21 முறை டக்-அவுட்களைப் பெற்றால் மட்டுமே நான் உங்களை அணியிலிருந்து நீக்குவேன்' என்று கூறினார்.
அந்த வார்த்தைகள் தனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறிய சாம்சன், "ஒரு பயிற்சியாளரும் கேப்டனும் அப்படிப் பேசும்போது, உங்கள் நம்பிக்கை தானாகவே உயரும். அவர்கள் உங்களை உண்மையிலேயே நம்புகிறார்கள், நீங்கள் வெற்றிபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்" என்று அவர் கூறினார்.