டி20 உலகக்கோப்பை| யாரும் நெருங்க முடியாத கோலியின் சாதனை.. உடைத்தார் சஞ்சு சாம்சன்!
2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. சஞ்சு சாம்சன் 97 ரன்கள் அடித்து, கோலியின் சாதனையை முறியடித்தார். வெஸ்ட் இண்டீஸின் 196 ரன்கள் இலக்கை இந்தியா சாதித்தது. சாம்சனின் ஆட்டம் இந்திய அணிக்கு முக்கிய வெற்றியைத் தந்தது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து முதலிய 3 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
அரையிறுதி செல்லும் 4வது அணி இந்தியாவா அல்லது வெஸ்ட் இண்டீஸா என முடிவுசெய்யும் முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
டி20 உலகக்கோப்பையில் இரண்டு அணிகளும் இதுவரை 5 முறை மோதியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 3 முறையும், இந்தியா ஒரு முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. இந்தமுறை இந்தியா வெல்லுமா என்ற அழுத்தம் அதிகமாகவே இருந்தது.
இந்தசூழலில் அழுத்தம் நிறைந்த போட்டியில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் நின்று 97 ரன்கள் அடித்ததுடன் இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச்சென்று அசத்தினார்.
கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை..
டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி இதுவரை அதிகபட்சமாக 173 ரன்களை மட்டுமே சேஸ்செய்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 196 ரன்கள் என்ற இலக்கு இந்தியாவிற்கு சவாலானதாக மாறியது.
ஒருபுறம் அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் என அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் நிலைத்து நின்று அதே நேரம் அதிரடியாகவும் விளையாடிய சஞ்சு சாம்சன் 12 பவுண்டரிகள் 4 சிச்கர்களுடன் 97 ரன்கள் அடித்து இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச்சென்றார்.
சஞ்சு சாம்சனின் இந்த பிரத்யேகமான ஆட்டம் நட்சத்திர வீரர் விராட் கோலியின் தனித்துவமான சாதனையை உடைக்க வழிவகுத்தது. டி20 உலகக்கோப்பையில் சேஸிங்கின் போது இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் டாப் 4 இடத்திலும் 82, 82, 78 மற்றும் 72 ரன்கள் என விராட் கோலியே நீடிக்கும் நிலையில், 97 ரன்கள் அடித்த சஞ்சு சாம்சன் கோலியை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்தார்.

