’நம் மண்ணை யாராலும் வீழ்த்த முடியாது..’ சாம்சனுக்கு வாழ்த்து சொன்ன முதல்வர், மோகன்லால், மம்மூட்டி!
2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெற்றது. சஞ்சு சாம்சன் 97 ரன்கள் அடித்து அசத்தியதுடன், கேரள முதல்வர் பினராயி விஜயன், மோகன்லால், மம்மூட்டி ஆகியோர் பாராட்டினர். சஞ்சுவின் ஆட்டம் இந்திய அணிக்கு பெருமை சேர்த்தது. அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளும் இந்தியா, வெற்றியை நோக்கி பயணிக்கிறது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரு கோப்பைக்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து முதலிய 3 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன.
அரையிறுதி செல்லும் 4வது அணி இந்தியாவா அல்லது வெஸ்ட் இண்டீஸா என முடிவுசெய்யும் முக்கியமான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இந்திய அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.
டி20 உலகக்கோப்பையில் இரண்டு அணிகளும் இதுவரை 5 முறை மோதியுள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் 3 முறையும், இந்தியா ஒரு முறை மட்டுமே வெற்றிபெற்றுள்ளன. இந்தமுறை இந்தியா வெல்லுமா என்ற அழுத்தம் அதிகமாகவே இருந்தது.
இந்தசூழலில் அழுத்தம் நிறைந்த போட்டியில் தரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், இறுதிவரை அவுட்டாகாமல் களத்தில் நின்று 97 ரன்கள் அடித்ததுடன் இந்தியாவை அரையிறுதிக்கு அழைத்துச்சென்று அசத்தினார்.
சஞ்சு சாம்சனை புகழ்ந்த பினராயி விஜயன்..
வாழ்வா சாவா போட்டியில் கிளாஸான பேட்டிங்கை வெளிப்படுத்திய சஞ்சு சாம்சன், தான் ஏன் சிறந்த வீரர் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துக்காட்டினார். சஞ்சு சாம்சன் அதிரடியால் அரையிறுதிக்கு தகுதிபெற்ற இந்தியா, மார்ச் 5ஆம் தேதி நடக்கும் அரையிறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
இந்நிலையில் சஞ்சுசாம்சனின் ஆட்டத்தை பாராட்டிய கேரளம் முதல்வர் பினராயி விஜயன், ”நமது நிலத்தில் ஏதோ ஒரு சிறப்பு இருக்கிறது. நம்மை யாராலும் வீழ்த்த முடியாது. நாட்டிற்காக இன்னும் பெரிய சாதனைகளைப் பெறுவோம். சஞ்சுவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!” என பாராட்டினார்.
மோகன்லால் தன்னுடைய பதிவில், ”சஞ்சு சாம்சனின் அற்புதமான ஆட்டத்தைப் பார்ப்பது மிகவும் உற்சாகமாக இருக்கிறது! அவரது குணத்தையும் திறமையையும் பறைசாற்றும் ஒரு தலைசிறந்த இன்னிங்ஸ். T20WorldCup2026 அரையிறுதிக்குள் நுழைந்ததற்காக ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். கொடியை உயரே பறக்க விடுங்கள்!” என பதிவிட்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் மம்மூட்டி, “சஞ்சு சாம்சனின் என்ன ஒரு ஆட்டம், ப்யூர் கிளாஸ் மற்றும் ஆதிக்கம். மிகப்பெரிய மேடையில் ஒரு அச்சமற்ற அறிக்கையை வெளிப்படுத்தியுள்ளார். T20WorldCup2026 அரையிறுதிக்குள் நுழைந்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள்” என பதிவிட்டுள்ளார்.

