சர்ச்சைக்குரிய RunOut| வங்கதேசத்தை சாடும் பாகிஸ்தான் ரசிகர்கள்.. மைதானத்தில் நடந்தது என்ன?
பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான 2வது ஒருநாள் போட்டியில் சர்ச்சைக்குரிய ரன் அவுட் நடந்தது. பாகிஸ்தான் வீரர் சல்மான் ஆகா, வங்கதேச பவுலர் மெஹிதி ஹாசனுக்கு உதவ முயன்றபோது, அவுட் செய்யப்பட்டார். இது பாகிஸ்தான் ரசிகர்களிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிற்கு வந்து வங்கதேசம் விளையாட மறுப்பு தெரிவித்த நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கமும் அவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
இந்நிலையில் டி20 உலகக்கோப்பை முடிந்த கையோடு இரண்டு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் தொடங்கி நடைபெற்றுவருகிறது. வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் பாகிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் 114 ரன்களுக்கு சுருண்டு பாகிஸ்தான் படுதோல்வியை சந்தித்த நிலையில், பாகிஸ்தான் - வங்கதேசம் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
சர்ச்சை ரன்அவுட்..
பரபரப்பாக தொடங்கிய 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 122 ரன்னுக்கு 3 விக்கெட்டுகள் இழந்தபோது, 4வது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் ஆகா இருவரும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு அசத்தினர்.
7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் என அடித்த சல்மான் ஆகா 64 ரன்களுடன் பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது தான், அந்த ரச்சை ரன் அவுட் நடந்தது. 39வது ஓவரை வீசிய வங்கதேச ஸ்பின்னர் மெஹிதி ஹாசனின் 4வது பந்தை எதிர்கொண்ட முகமது ரிஸ்வான், பந்தை நேராக நான் ஸ்ட்ரைக்கராக நின்றுகொண்டிருந்த சல்மான் ஆகாவிடம் அடித்தார். அப்போது க்ரீஸை விட்டு வெளியே நின்றிருந்த சல்மான் ஆகா, மீண்டும் க்ரீஸுக்கு செல்ல திரும்பியபோது பந்தை பிடிக்க சென்ற மெஹிதி ஹாசன் அவரை மறித்து நின்றார்.
அதனால் க்ரீஸுக்கு திரும்பி செல்வதைவிட்டு கேசுவலாக பந்தை எடுத்து பவுலருக்கு உதவிசெய்ய நினைத்தார் சல்மான் ஆகா. ஆனால் பந்தை வேகமாக எடுத்த வங்கதேச பவுலர் மெஹிதி ஹாசன், நேராக ஸ்டம்பை அடித்து அவுட் கேட்டார். அதை பெரிதும் எதிர்ப்பார்க்காத சல்மான் நான் உனக்கு உதவிசெய்ய தானே நினைத்தேன் என வாக்குவாதம் செய்தார். ஆனால் நீ வெளியே தான் நின்றுகொண்டிருந்தாய் என மெஹிதி ஹாசன் கூற, முடிவு 3வது அம்பையருக்கு சென்றது. அவர் அவுட் என சிக்னல் கொடுக்க கோபத்தில் கைக்கிளவுஸை எறிந்துவிட்டு வெளியேறினார் சல்மான் ஆகா.
விளாசும் பாகிஸ்தான் ரசிகர்கள்..
இந்த ரன் அவுட்டை வங்கதேச கிரிக்கெட் தங்களின் எக்ஸ் தள பக்கத்தில் ‘brilliant run-out’ என பதிவுசெய்ய, அதை பாகிஸ்தான் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஏற்கனவே இலங்கை-வங்கதேசம் இடையே ஹெல்மெட் மாற்றுவதற்கு சென்ற ஆஞ்சிலோ மேத்யூஸுன் ’Timed Out' சர்ச்சைக்குரிய விசயமாக மாறிய நிலையில், தற்போது பவுலருக்கு உதவசென்ற பாகிஸ்தான் வீரரின் ரன் அவுட்டும் சர்ச்சைக்குரிய விசயமாக மாறியுள்ளது.

