இந்தியாவிற்கு உதவிய ’முட்டாள்’ அணி தென்னாப்ரிக்கா..! - முன்னாள் வீரர் சாடல்
2026 டி20 உலகக்கோப்பையில் இந்தியா வென்றதையடுத்து அதற்கு அனுமதித்த தென்னாப்பிரிக்காவை முட்டாள்தனமான அணி என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் சாடியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பையை இந்தியா 3வது முறையாக வென்ற நிலையில், தொடரிலிருந்து வெளியேற வேண்டிய இந்தியாவை வெல்லவைத்ததாக தென்னாப்பிரிக்காவை முட்டாள் அணி என்று முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் சாடியுள்ளார்.
நடந்துமுடிந்த டி20 உலகக்கோப்பையில் சூப்பர் 8 போட்டியில் இந்தியாவை 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த தென்னாப்பிரிக்கா, இந்திய அணியின் நெட் ரன்ரேட்டை -3.8க்கு கீழ் தள்ளியது. இந்தசூழலில் இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெற வேண்டுமானால் அடுத்திருந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணியை மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. மேலும் ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியில் தென்னாப்பிரிக்கா தோற்றால், இந்தியா தொடரிலிருந்து வெளியேறி வெஸ்ட் இண்டீஸும், தென்னாப்பிரிக்காவும் அரையிறுதிக்கு செல்லும் எதிர்ப்பார்ப்பு இருந்தது.
ஆனால் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றதால், இந்தியாவிற்கு போட்டியை வென்றால் மட்டும் போதும் என்ற அழுத்தம் இல்லாத நிலை உருவானது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தென்னாப்பிரிக்கா தோற்றிருந்தால் இந்தியா உலகக்கோப்பை வென்றிருக்காது என முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கூறியுள்ளார்.
முட்டாள்தனமான அணி தென்னாப்பிரிக்கா..
இந்தியாவை எந்த அணி வீழ்த்துகிறதோ அந்த அணிக்கே கோப்பை வெல்ல அதிக வாய்ப்புகள் இருக்கிறது என சொல்லப்பட்ட நிலையில், தென்னாப்பிரிக்கா இந்தியாவை நசுக்கி வெற்றிபெற்றது. இதனால் தென்னாப்பிரிக்காவே கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணியாக கருதப்பட்டது. ஆனால் வெஸ்ட் இண்டீஸை தென்னாப்பிரிக்கா வீழ்த்தியதால் அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பை வென்று சாதனை படைத்தது.
இந்நிலையில் சமீபத்திய உரையாடல் ஒன்றில் பேசியிருக்கும் மைக்கேல் வாகன், “2026 டி20 உலகக்கோப்பையில் முட்டாள்தனமான ஒரு அணி என்றால் அது தென்னாப்பிரிக்கா தான். ஒருவேளை அவர்கள் வெஸ்ட் இண்டீஸை சூப்பர் 8-ல் வெற்றிபெற அனுமதித்திருந்தால், இந்தியா உலகக்கோப்பையிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கும்... அன்று அவர்கள் மேற்கிந்திய தீவுகளிடம் தோற்றிருந்தால், இந்தியா உலகக் கோப்பையை வென்றிருக்காது” என தெரிவித்துள்ளார்.

