ஓய்வுபெற்ற ரோஜர் பின்னி.. பிசிசிஐயின் அடுத்த தலைவராகும் சச்சின் டெண்டுல்கர்?
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதன் வரவிருக்கும் தலைமை மாற்றத்திற்குத் தயாராகி வருவதால், அந்த இடத்திற்கு சச்சின் டெண்டுல்கரைத் தேர்வு செய்யவிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார். டைனிக் ஜாக்ரனின் அறிக்கையின்படி, சமீபத்திய கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி விலகியுள்ளார். அவர் தனது பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியானது. அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை ராஜீவ் சுக்லா இடைக்காலத் தலைவராக நீடிப்பார் எனத் தெரிகிறது. இந்தத் தேர்தல் இந்த மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே, இந்தத் தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தேர்வு செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுதொடர்பாக எதுவும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
2019ஆம் ஆண்டில் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி பிசிசிஐ தலைவராகப் பதவியேற்ற பிறகு, இந்திய அணி புதுப்பிக்கப்பட்ட வேகத்தைப் பெற்றது. அதன்பிறகு, 1983 உலகக் கோப்பை வெற்றியின் நாயகனான ரோஜர் பின்னியும் இந்திய அணியை வலுவான பாதைக்கு இழுத்துச் சென்றார். தற்போது அதே நிலையைத் தக்கவைக்க சச்சின் டெண்டுல்கரால் முடியும் என நம்பப்படுகிறது. இதைவைத்தே, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதன்படியே, இதுதொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதேநேரத்தில், தகவல்கள்படி, இணைச் செயலாளர் தேவஜித் சைகியா தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்வார் என்றும், பொருளாளர் பிரப்தேஜ் பாட்டியா மற்றும் இணைச் செயலாளர் ரோஹன் கவுன்ஸ் தேசாய் ஆகியோர் பதவியில் நீடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஐபிஎல் தலைவர் பதவிக்கு, மும்பை கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சஞ்சய் நாயக் மற்றும் தற்போதைய பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஆகியோரின் பெயர்கள் சுற்றி வருகின்றன. சுக்லா மீண்டும் ஐபிஎல் தலைவராகும் பட்சத்தில், பீகார் கிரிக்கெட் சங்கத் தலைவரும் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவருமான ராகேஷ் திவாரி பிசிசிஐ துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடலாம் எனக் கூறப்படுகிறது. ஆண்டு பொதுக் கூட்டம் செப்டம்பர் கடைசி வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தேர்தல் சங்கத்தின் விதிகளின்படி ஓரிரு காலியிடங்கள் மட்டுமே பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.