பதவி விலகிய ரோஜர் பின்னி.. BCCIயின் இடைக்காலத் தலைவராகப் பொறுப்பேற்ற ராஜீவ் சுக்லா!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, தனது பதவியில் இருந்து விலகியுள்ளதால், துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதவி விலகிய ரோஜர் பின்னி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலிக்குப் பதிலாக, அக்டோபர் 2022இல் ரோஜர் பின்னி BCCI தலைவராக நியமிக்கப்பட்டார். 1983 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த ரோஜர் பின்னிக்கு கடந்த மாதம் 70 வயது நிறைவடைந்தது. அவருக்கு ஏற்கெனவே 70 வயதாகிவிட்டதால், அவர் தனது பதவியில் இருந்து விலகுவார் என்று தகவல்கள் பரவத் தொடங்கின. ஏனெனில் BCCI-யின் அரசியலமைப்பின்படி, எந்தவொரு அலுவலகப் பொறுப்பாளரும் 70 வயதை எட்டியதும் தனது பதவியை காலி செய்ய வேண்டும். இருப்பினும், சமீபத்தில் இந்திய அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தேசிய விளையாட்டு மசோதா, ஒரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் எந்தவோர் அலுவலகப் பொறுப்பாளரும் 75 வயது வரை பதவியில் தொடரலாம் என்று கூறுகிறது. இது, இப்போது ரோஜர் பின்னி தனது பதவியில் நீடிக்க எந்தத் தடையும் இல்லை என்று பலர் நம்புவதற்கு வழிவகுத்தது.
இடைக்காலத் தலைவரான ராஜீவ் சுக்லா
ஆனால் டைனிக் ஜாக்ரனின் அறிக்கையின்படி, சமீபத்திய உச்ச கவுன்சில் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து ரோஜர் பின்னி விலகியுள்ளார். அவர் தனது பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, துணைத் தலைவராக இருந்த ராஜீவ் சுக்லா இடைக்கால தலைவராக பொறுப்பேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை ராஜீவ் சுக்லா இடைக்காலத் தலைவராக நீடிப்பார் எனத் தெரிகிறது. இந்தத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் எனத் தெரிகிறது.
தேசிய விளையாட்டு மசோதா சொல்வது என்ன?
அதேநேரத்தில், தேசிய விளையாட்டு மசோதா, நிர்வாகிகள் 75 வயது வரை பதவியில் இருக்க அனுமதித்தாலும், பிசிசிஐ இன்னும் ஒரு சுதந்திரமான அமைப்பாகும், மேலும் அதன் சொந்த அரசியலமைப்பைப் பின்பற்றுகிறது. எனவே, நிர்வாகிகளுக்கான வயது வரம்பு 70 ஆகவே உள்ளது. எனவேதான் பின்னி ராஜினாமா செய்ய முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தேசிய விளையாட்டு நிர்வாகச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், இந்தச் சட்டம் இன்னும் அறிவிக்கப்படாததால், பிசிசிஐ அதன் வருடாந்திர பொதுக் கூட்டத்தையும் தேர்தல்களையும் அடுத்த மாதம் நடத்த வேண்டியிருக்கும். சட்டம் முறையாக இயற்றப்பட இன்னும் நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகலாம் என்றும், அதுவரை தேர்தல்களை ஒத்திவைக்க முடியாது என்றும் அறிக்கை ஒன்று கூறுகிறது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு செயல்படும் பிசிசிஐ
தற்போது, லோதா குழுவின் பரிந்துரைகள் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அரசியலமைப்பின்கீழ் கிரிக்கெட் வாரியம் செயல்படுகிறது. புதிய சட்டம் நடைமுறைக்கு வரும்வரை, பிசிசிஐ மற்றும் அதன் மாநில சங்கங்கள் இரண்டும் ஏற்கெனவே உள்ள கட்டமைப்பின்கீழ் தொடர்ந்து செயல்பட வேண்டும். மறு அறிவிப்பு வரும்வரை இரு மட்டங்களிலும் தேர்தல்கள் தற்போதைய அரசியலமைப்பின்கீழ் நடத்தப்படும் என்று விளையாட்டு அமைச்சகம் சமீபத்தில் தெளிவுபடுத்தியது. பிசிசிஐ அல்லது எந்த மாநில சங்கத்திற்கும் தேர்தல்கள் நடைபெறவிருந்தால், அவை தற்போதைய விதிகளின்படி நடத்தப்படும் என்றும் அந்த அறிக்கை மேலும் கூறியது. லோதா குழுவின் பரிந்துரைகள் அமலில் இருக்கும், அதன்படி நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் அல்லது நீக்கப்படுவார்கள். இந்த விதிகளின் கீழ், நிர்வாகிகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 70 ஆண்டுகள் ஆகும், அதாவது அந்த வயதை அடைவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட எவரும் முழு பதவிக் காலமும் பணியாற்றலாம் என நியூஸ் 18 வெளியிட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.