TEN x YOU | சச்சின் தொடங்கிய புதிய ஸ்போர்ட்ஸ் ஆடை மற்றும் ஷூ பிராண்ட்!
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய புதிய ஸ்போர்ட்ஸ் பொருட்கள் சார்ந்த TEN x YOU என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகபட்ச ரன்கள் போன்ற பல உலகசாதனைகளுக்கு சொந்தக்காரர் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். இவரை ரசிகர்கள் இன்றும் ‘கிரிக்கெட்டின் கடவுள்’ என கொண்டாடி வருகின்றனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு மீது அதிக ஆரவம் கொண்டவரான சச்சின் டெண்டுல்கர், TEN x YOU என்ற பெயரில் ஸ்போர்ட்ஸ் உடைகள் மற்றும் ஷூ பிராண்ட் ஒன்றை புதியதாக நிறுவியுள்ளார். இந்த நிறுவனத்தின் அறிமுக விழா நேற்று மும்பையில் நடைபெற்றது.
விளையாடுவதை நிறுத்திவிடாதீர்கள்..
SRT10 அத்லீஷர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் டெண்டுல்கர், கார்த்திக் குருமூர்த்தி மற்றும் கரண் அரோரா ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட இந்த பிராண்ட், இந்தியாவின் வளர்ந்து வரும் விளையாட்டு ஆடை சந்தையில் நுழைகிறது.
இந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய சச்சின் டெண்டுல்கர், ”சிறுவனாக இருந்த போது மழை, வெயில் என எல்லா காலநிலையிலும் கிரிக்கெட்டை மகிழ்ந்து விளையாடுவேன். இந்தியாவுக்காக விளையாட மைதானத்துக்குள் இறங்கும் போது என்ன மகிழ்ச்சி கிடைக்குமோ, அதே மகிழ்ச்சி இன்றும் எனக்கு உள்ளது.
இந்தியா விளையாட்டை விரும்பும் நாடு என்பதில் இருந்து, விளையாடும் நாடாக மாறுவதை காண வேண்டும் என்பதே எனது தொலைநோக்கு பார்வை. பள்ளத்தாக்கு முதல் மைதானம் வரை அனைத்து இடங்களிலும் அனைவரும் விளையாட வேண்டும். விளையாட்டு மூலம் நான் உணர்ந்த மகிழ்ச்சியை அனைவரும் உணர வேண்டும். ஒரு விளையாட்டை விளையாடும் போது அது உங்களை உலகின் உச்சத்தில் இருப்பதை போல உணர வைக்கும். எனவே விளையாட தொடங்குகள். விளையாடுவதை நிறுத்தாதீர்கள்” என தெரிவித்தார்.