IND vs SA | சொல்லி அடித்த ருத்து - விராட்! கைகொடுத்த ராகுல்.. இந்திய அணி அபாரம்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்ரிக்காவே வெற்றி பெற்றிருக்கிறது. இத்தகைய சூழலில் நடைபெற்ற ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், விராட் கோலி அசத்தலான சதம் அடித்து வெற்றிக்கான காரணமாக அமைந்த நிலையில் ஆட்டநாயகன் விருது கூட அவருக்கே வழங்கப்பட்டது.
இந்நிலையில், இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. ராய்ப்பூரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்ரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ஜெய்ஸ்வாலும், ரோகித் சர்மாவும் சொற்ப ரன்களில் 10 ஓவர்களுக்குள்ளாகவே வெளியேறினர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜெய்ஸ்வால் இந்த முறையும் இடதுகை வேகப்பந்து வீச்சுக்கு எதிராக தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்திய அணிக்காக ஜெய்ஸ்வால் விளையாடிய கடந்த ஆறு இன்னிங்ஸ்களில், ஐந்து முறை இடதுகை வேகப்பந்து வீச்சுக்கு தனது விக்கெட்டை இழந்துள்ளார்; அதில் நான்கு முறை யான்சனுக்கு எதிராக மட்டுமே விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார்.
இதனையடுத்து, விராட் கோலியும் ருதுராஜும் வலுவான பார்டனர்ஷிப் அமைத்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ருதுராஜ் வழக்கம்போல் நிதானமாகவே தனது இன்னிங்ஸை ஆரம்பித்தார் ஆனால், 52 பந்துகளில் அரைசதத்தை அவர் கடந்ததும் அவரது ரன் சேர்க்கும் திறன் புயல் வேகத்திற்கு மாறியது. முதலில் 52 பந்துகளில் அரைசதத்தைக் கடந்த அவர், அதன்பிறகு வேகத்தை அதிகரித்து 77 பந்துகளிலேயே நூறு ரன்களைக் கடந்தார். இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ருதுராஜ் தனது ஒருநாள் முதல் சதத்தினைப் பதிவு செய்தார். பின்னர், 105 ரன்களில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்த அவர் 83 பந்துகளை எதிர்கொண்டு 12 பவுண்டரிகளையும் இரண்டு சிக்சர்களையும் விளாசியிருந்தார்.
கடந்த போட்டியில், சதமடித்து தான் ஒரு OG என மீண்டும் நிரூபித்த கோலி இந்த போட்டியிலும் அதிரடியான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். 47 பந்துகளில் அரைசதம் கடந்த அவர் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன் மூலம் தனது கிரிக்கெட் வரலாற்றில் 13 முறை தொடர்ச்சியாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முறை அரைசதம் கடந்த வீரராக மாறியிருக்கிறார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அவர் 102 ரன்களைக் குவித்து இங்கிடி பந்துவீச்சில் தனது விக்கெட்டைப் பறிகொடுத்தார். 93 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரிகளையும் 2 சிக்சர்களையும் விளாசியிருந்தார்.
பின் வந்த ராகுலும் அபாரமாக ஆடி அரைசதம் கடக்க இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்களைக் குவித்தது. ராகுல் 66 ரன்களுடனும் ஜடேஜா 24 ரன்களுடனும் களத்தி இருந்தனர். 359 ரன்கள் எனும் இலக்கை நோக்கி தென்னாப்ரிக்கா ஆடிவருகிறது.
25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி. கடைசி 12 மாதங்களுக்குள் 2 முறை சொந்தமண்ணில் டெஸ்ட் தொடரை இந்தியா இழந்திருக்கும் நிலையில், கவுதம் கம்பீரின் தலைமை பொறுப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இத்தகைய சூழலில்தான் ஒருநாள் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டது.
ஏனெனில், விராட் கோலி, ரோகித் சர்மா போன்றோர் மீண்டும் அணிக்குத் திரும்பினர். அதோடு, ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், துருவ் ஜுரேல் என இளம் வீரர்களும் அணியில் இடம்பிடித்தனர். இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது ருதுராஜ் கெய்க்வாட்தான். ஏனெனில், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ஆடியிருந்தும் தேசிய அணியில் அவருக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என ரசிகர்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். இத்தகைய சூழலில்தான் அவர் அணிக்குத் தேர்வானார்.
அவரது தேர்வு தொடர்பாகப் பேசிய இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல், “உண்மையிலேயே ருதுராஜ் ஒரு டாப் கிளாஸ் பிளேயர். அவர் எப்போதெல்லாம் தனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறதோ அப்போதெல்லாம் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இந்த தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு கிடைத்த வாய்ப்பினை நிச்சயம் அவர் பயன்படுத்திக்கொள்வார் என்று நினைக்கிறேன். நாங்களும் அவருக்கு இந்த தொடரில் விளையாட வாய்ப்பை வழங்க காத்திருக்கிறோம்” என்று தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில்தான் ருதுராஜ் சதமடித்து தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்.

