சமாஜ்வாதி எம்.பி-உடன் ரிங்கு சிங் நிச்சயதார்த்தமா? உண்மை என்ன? எம்.பி-யின் தந்தை சொன்ன தகவல்!
இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குவும், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் பிரியா சரோஜூக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாக, தகவல் வெளியானது. ஆனால், இருவரும் தங்களது சமூக வலைதளக் கணக்குகளில் இது தொடர்பாக எந்த ஒரு பதிவையும் வெளியிடவில்லை.
இந்நிலையில் இந்த தகவலை, பிரியா சரோஜின் தந்தை துஃபானி சரோஜ் மறுத்துள்ளார். இருப்பினும் ரிங்குவின் குடும்பம் இருவரது திருமணம் பற்றி தங்களிடம் பேசியுள்ளதாகவும், இது தொடர்பாக தாங்கள் தீவிரமான ஆலோசித்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
துஃபானி சரோஜ் உத்தரபிரதேசத்தின் மச்லிஷஹர் மக்களவைத் தொகுதியின் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது மகளான பிரியா சரோஜ் (26) அதே தொகுதியில் பாஜக வேட்பாளரான போலாநாத்தை 35 ஆயிரத்து 850 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டமும், நொய்டாவில் உள்ள அமிட்டி பல்கலைக்கழகத்தில் எல்எல்பி பட்டமும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
27 வயதான ரிங்கு சிங் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மிக முக்கியமான வீரர். மேலும், 2 ஒருநாள் போட்டிகளில் 55 ரன்களையும், 30 டி20 போட்டிகளில் 507 ரன்களையும், 46 ஐபிஎல் போட்டிகளில் 893 ரன்களையும் எடுத்தவர். டி20 போட்டிகளில் கிட்டத்தட்ட நிரந்தர வீரராகவே இடம்பிடித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.