நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் வழக்கு: இன்று தீர்ப்பு!
நாட்டையே உலுக்கிய கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை வழக்கில், கொல்கத்தா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை நடந்தது என்ன என்பதை தற்போது காணலாம்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவின் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதி பயிற்சி மருத்துவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது, தெரியவந்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த விவகாரத்தில் மேற்குவங்க அரசு உண்மையை மறைப்பதாகவும், குற்றவாளியை காப்பாற்ற முயன்றதாகவும் குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களும் எழுந்தன. இதற்கு மத்தியில், இவ்வழக்கு தொடர்பாக காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நீதி வேண்டி மேற்குவங்க மருத்துவர்கள் நீண்ட வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கொண்டனர்.
பெண்களும் இந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் மேற்கொண்ட நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்றது.
இதனிடையே, இந்த வழக்கை கொல்கத்தா உயர் நீதிமன்றம், சிபிஐக்கு மாற்றி ஆணையிட்டது. சஞ்சய் ராய்க்கு மட்டுமில்லாமல், அப்போதைய மருத்துவமனை முதல்வர், காவல் நிலைய பொறுப்பாளர் உள்ளிட்டோர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், சிபிஐ சரியான நேரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததால் அவர்கள் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டது.
இந்தசூழலில், இன்று கொல்கத்தாவின் சீல்டாவில் உள்ள அமர்வு நீதிமன்றம், இந்த வழக்கில் தீர்ப்பளிக்கிறது. அதேவேளையில், உயிரிழந்த மருத்துவரின் பெற்றோர், வழக்கில் விசாரணை பாதிதான் முடிவடைந்திருப்பதாகவும், நீதி கிடைக்கும் வரை போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளனர்.