இந்திய பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்ம்.. முக்கிய முடிவெடுத்த ரோகித்..!
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியை இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. மூன்றாவது போட்டி ட்ரா ஆனது. இந்நிலையில்தான் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை மெல்பர்னில் நடைபெற உள்ளது.
நான்காவது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த இரு போட்டிகளில் ரோகித் சர்மா ஆறாவது இடத்தில் களமிறங்கி இருந்தார். இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று இன்னிங்ஸில் களமிறங்கியுள்ள ரோகித் சர்மா மொத்தமாகவே 19 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில்தான், ரோகித் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதேசமயத்தில் கே.எல்.ராகுல் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆறு இன்னிங்ஸிலும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ராகுல் மொத்தமாக 235 ரன்களை எடுத்துள்ளார். இதில் இரு அரைசதங்களும் அடக்கம். அவரது சராசரி 47 ஆக உள்ளது. அதுமட்டுமின்றி, இந்திய பேட்ஸ்மேன்களில் அதிக ரன்களை எடுத்தவராகவும் ராகுலே உள்ளார்.
நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா இணைந்து செயல்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இரு சுழற்பந்து வீச்சாளர்கள் களமிறங்கும் சூழலில் நிதிஷ் குமார் ரெட்டி பிளேயிங் லெவனில் இடம் பெற வாய்ப்பில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நிதிஷ் குமார் ரெட்டி 3 போட்டிகளில் 6 இன்னிங்ஸில் களமிறங்கி 179 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா உடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில், இந்திய பேட்ஸ்மேன்களின் ஐசிசி டெஸ்ட் தரவரிசை பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டிக்குப் பின் 2 ஆவது இடத்திற்கு சென்ற ஜெய்ஸ்வால், அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளுக்குப் பின் 5 ஆவது இடத்திற்கு சென்றார். ரிஷப் பந்த் 11 ஆவது இடத்திலும், கில் 20 ஆவது இடத்திலும் உள்ளனர். கோலி 21 ஆவது இடத்தில் உள்ள நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 35 ஆவது இடத்தில் உள்ளார். கே.எல்.ராகுல் 10 இடங்கள் முன்னேறி 40ஆவது இடத்தில் உள்ளார். ஜடேஜா 42 ஆவது இடத்தில் உள்ளார்.