37 ஆண்டு சாதனையை உடைக்கவிருக்கும் ரோகித் சர்மா.. இன்றைய ODI போட்டியில் புதிய மைல்கல்!
தரம்சாலாவில் இன்று தொடங்கும் இந்தியா–ஆப்கானிஸ்தான் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா புதிய வயது சாதனை நோக்கி செல்கிறார். 37 ஆண்டு பழமையான மொஹிந்தர் அமர்நாத் சாதனையை முறியடித்து, இந்தியாவின் அதிக வயதான ODI வீரராகிறார். டெஸ்டில் ஆப்கானிஸ்தானை 300 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, இப்போது ஒருநாளிலும் ஆதிக்கம் செலுத்தத் தயாராக உள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணி 1 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி அசத்தியது.
இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கவிருக்கிறது. இரண்டு அணிகளும் மோதவிருக்கும் முதல் ஒருநாள் போட்டி பகல் 1.30 மணிக்கு தரம்சாலா மைதானத்தில் நடக்கவிருக்கிறது. விராட் கோலி காயம் காரணமாக தொடரிலிருந்து விலகிய நிலையில், ரோகித் சர்மா விளையாடவிருக்கிறார்.
இன்றைய ஒருநாள் போட்டியில் விளையாடவிருக்கும் ரோகித் சர்மா, ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடிய அதிக வயதான இந்திய வீரர் என்ற பெருமையை படைக்க உள்ளார். இதற்கு முன்னர் அதிக வயதில் ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய இந்திய வீரராக 39 வயது 36 நாட்களில் மொஹிந்தர் அமர்நாத் இருந்தார். 1989ஆம் ஆண்டு மொஹிந்தர் அமர்நாத் இச்சாதனையை படைத்திருந்தார். தற்போது 39 வயது 44 நாட்களில் ரோகித் சர்மா அச்சாதனையை உடைக்கவுள்ளார்.
அதிக வயதில் ஒருநாள் கிரிக்கெட் விளையாடிய உலக வீரர் என்ற சாதனை நெதர்லாந்தை சேர்ந்த நோலன் கிளார்க் வசமே உள்ளது. 1996-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடியபோது அவருக்கு வயது 47 ஆண்டுகள் 257 நாட்களாகும்.
ஒருநாள் போட்டியில் 11ஆயிரம் ரன்களும், சர்வதேச போட்டிகளில் 20ஆயிரம் ரன்களும் அடித்திருக்கும் ரோகித் சர்மாவின் கிரிக்கெட் பயணத்தில் இந்த சாதனையை புதிய கௌரவத்தை சேர்க்கவுள்ளது.

