ரொனால்டோ அணியின் பலவீனம்.. பிரேசில், ஜெர்மனிக்கு வாய்ப்பு உண்டா? FIFA கோப்பையை வெல்லும் அணி எது?
FIFA கால்பந்து உலகக்கோப்பை தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்றுவரும் நிலையில், இந்த தொடரில் வெற்றிபெற வாய்ப்புள்ள டாப் 3 அணிகளான ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகளின் பலம், பலவீனம் குறித்து ஏற்கெனவே பார்த்தோம். தற்போது உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள பிற அணிகளின் பலம், பலவீனங்களையும் பார்க்கலாம்.
இங்கிலாந்து
ஸ்பெயின், பிரான்ஸ், அர்ஜென்டினா அணிகளைத் தாண்டி இந்த உலகக்கோப்பையை வெல்லும் அணியாக பல்வேறு வல்லுனர்களும் கருதுவது இங்கிலாந்து அணியைத்தான். இங்கிலாந்து கால்பந்து வரலாற்றிலேயே ஒரு கனவு அணியாக (Dream Team) தற்போதைய இங்கிலாந்து அணி இருப்பதாக இங்கிலாந்தின் விளையாட்டு வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த அணியின் ஸ்ட்ரைக்கராக உலகின் மிகச் சிறந்த வீரர்களில் ஒருவரான ஹரி கேன் (Harry Kane), இடது விங்கராக கோர்டான் (Anthony Gordon) , வலதுபக்க வீரராக புகாயோ சாகா (Bukayo Saka) ஆகியோரும், இவர்களுக்கு மாற்று வீரர்களாக நோனி மடுக்கே (Noni Madueke), ராஷ்போர்ட் (Marcus Rashford) ஆகிய சிறந்த வீரர்களும் அணியின் வலுவாக உள்ளனர்.
அதேபோல நடுகளத்தில் கால்பந்தின் அடுத்த சூப்பர் என கருதப்படும் பெல்லிங்காம் (Jude Bellingham), மைனோ (Kobbie Mainoo) டெக்லான் ரைஸ் (Declan Rice) ஆகியோரோடு, ஜோர்டான் ஹெண்டர்சன் (Jordan Henderson), இசி (Eberechi Eze) ஆகிய சிறந்த வீரர்களும் உள்ளனர்.
மேலும் பின்களத்திலும் டேன் பர்ன் (Dan Burn), ரீசி ஜேம்ஸ் (Reece James), நிக்கோ ஓ ரெலி (Nico O'Reilly), குவான்ஷா (Jarell Quansah), ஜான் ஸ்டோன்ஸ்(John Stones) போன்ற நட்சத்திர வீரர்களும் உள்ளனர்.
எனினும் இங்கிலாந்துக்கு எப்போதும் இருக்கும் சிக்கலான பிரச்னையே, முக்கியப் போட்டிகளில் சொதப்புவதுதான். அதுதான், அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக இருக்கிறது. கடந்த யூரோ கோப்பை தொடரில் இறுதிப்போட்டி வரை முன்னேறியும், இறுதிக்கட்டத்தில் பதற்றத்தில் செய்த தவறுகளால் ஸ்பெயின் அணியிடம் கோப்பையை பறிகொடுத்தது. அதேபோல கிளப் மட்டத்திலும் சாம்பியன்ஸ் லீக் உள்ளிட்ட சர்வதேச தொடர்களின் முக்கிய நாக் அவுட் போட்டிகளில் இங்கிலாந்து கிளப்கள் தொடர்ந்து தோல்வியே தழுவி வருகின்றன. இப்படி அனைத்துச் சிறப்புகளும் இருந்தும் முக்கியப் போட்டிகளில் சொதப்புவதன் காரணமாகவே டாப் 3 அணிகளில் ஒன்றாக இல்லாமல் பின்தங்கியுள்ளது இங்கிலாந்து அணி.
போர்ச்சுகல்
கடந்த 20 ஆண்டுகளாக ரொனால்டோவை நம்பியே உலகக்கோப்பை தொடரில் களமிறங்கும் போர்ச்சுகல் அணி, முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நட்சத்திர வீரர்களை நம்பி இந்த கால்பந்து தொடரில் களமிறங்கியுள்ளது.
ரொனால்டோ (Cristiano Ronaldo), ரபேல் லியோ (Rafael Leao), பெட்ரோ நீட்டோ (Pedro Neto) , கான்சலோ ராமோஸ் (Goncalo Ramos), ஜோவோ பெலிக்ஸ் (Joao Felix) போன்ற டாப் வீரர்கள் அடங்கிய முன்களமும், கேன்சலோ (Cancelo), டேலோட் (Diogo Dalot), ரூபென் டையாஸ் (Ruben Dias), நுனோ மெண்டஸ் (Nuno Mendes) அடங்கிய பின்களமும் உலகக்கோப்பையில் சிறந்த கூட்டணிகளில் ஒன்றாக விளங்குகிறது.
இந்த அணியை உலகக்கோப்பையை வெல்லும் அணியாக மாற்றியது என்றால், அது இந்த அணியின் வலிமையான நடுக்களம்தான். ப்ருனோ பெர்னாண்டஸ் (Bruno Fernandes), பெர்னாண்டோ சில்வா (Bernardo Silva), விடினியா (Vitinha), ஜோவோ நெவாஸ் (Joao Neves), ரூபன் நெவாஸ் (Ruben Neves) ஆகியோரை கொண்ட நடுகளமே உலகின் சிறந்த வீரர்களைக் கொண்ட நடுகளமாக கருதப்படுகிறது.
அதேநேரம், இந்த அணியின் சிக்கலாகவும் இந்த நடுகளமே உள்ளது. நடுகளத்தில் ஆடும் இந்த வீரர்கள் அனைவரும் அவர்களின் கிளப் அணியின் நட்சத்திர வீரர்களாக உள்ளனர். இவர்களின் கிளப் அணிகள் இவர்களைச் சுற்றியே வியூகங்கள் வகுக்கும் நிலையில், அவர்களின் செயல்பாடு அந்த அணியில் சிறப்பாக உள்ளது.
ஆனால், இந்த நட்சத்திர வீரர்கள் ஒரே அணியில் ஆடும்போது, அவர்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு இல்லாததே போர்ச்சுகல் அணியின் பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. இவர்களோடு கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவும் அணியில் உள்ள நிலையில், பெனால்டி, பிரீ கிக் ஆகியவற்றை யார் எடுப்பது என்பதில் இவர்களுக்கு இடையே மோதல் வருவது பகிரங்கமாக வெளிப்படுகிறது.
அதோடு ரொனால்டோவுக்கு 41 வயதாகியுள்ள நிலையில், அவரை 90 நிமிடமும் ஆடவைக்க வேண்டுமா அல்லது அவரை மாற்று வீரராக பயன்படுத்த வேண்டுமா என்பதிலும் பெரும் குழப்பம் நிலவுகிறது. இதுவும் போர்ச்சுகல் அணிக்கு பெரும் சிக்கலாக மாறியுள்ளது.
பிரேசில்
எப்போதுமே உலகக்கோப்பையை வெல்லும் அணியாக கருதப்படும் பிரேசில் அணி, இந்த முறையும் அந்த நம்பிக்கையுடனேயே களமிறங்குகிறது. எனினும் கள நிலவரம் அந்த அணிக்கு எதிராகவே இருக்கிறது. வினிசியஸ் ஜூனியர் (Vinícius Júnior), ரபீன்கா(Raphinha), மார்டினெலி (Gabriel Martinelli ), குன்கா (Matheus Cunha) ஆகியோருடன் இளம் வீரர் என்ரிச்(Endrick ) ஆகியோர் கொண்ட முன்களம் வலுவாகவே காட்சியளிக்கிறது. இவர்களுடன் அனுபவம் வாய்ந்த நெய்மாரும் இணைந்துள்ளது பிரேசில் அணியின் முன்களத்தை பெரும் பலம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
ஆனால், ஆட்டத்தைக் கட்டுப்படுத்தி வலிமையான முன்களத்துக்கு பந்தைக் கொடுக்கும் அளவு நடுகளம் பலமில்லாமல் இருப்பதே பிரேசில் அணியின் மிகப்பெரும் பலவீனமாகக் கருதப்படுகிறது. பிரேசில் அணியின் நடுகளத்தில் மூத்த வீரர் காசமிரோவை தவிர, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள் ஒருவரகூட இல்லாதது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
அதேபோல பின்களத்தில் மார்கினியோஸ் (Marquinhos), மிலிட்டாவோ (Éder Militão), மகாலஹேஸ் (Gabriel Magalhães) ஆகிய சிறந்த சென்டர் பேக் வீரர்கள் இருந்தாலும், வலது, இடது பக்க வீரர்களான டானிலோ (Danilo), வெண்டெல் (Wendell) அல்லது கூட்டோ (Yan Couto) ஆகியோர் தொடர்ந்து சொதப்பி வருவது அந்த அணிக்குப் பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
இதனை எல்லாம் தாண்டி பிரேசில் அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் ஏதேனும் அதிசயம் நடந்தால் மட்டுமே உண்டு என்றே நிலையே தற்போது உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனி
இதுதவிர, எப்போதுமே உலகக்கோப்பையை வெல்லும் அணிகளில் டாப் 3இல் இருக்கும் ஜெர்மனியை யாருமே இந்த முறை கோப்பையை வெல்லும் அணியாகக் குறிப்பிடவில்லை. அந்த அணியில் கவனிக்கத்தக்க வீரர்களான முசியாலா (jamal Musiala), இளம் வீரர் பிளோரியன் விர்ட்ஸ் (Florian wirtz) ஆகியோர் ஏதும் தாக்கம் ஏற்படுத்தினால் மட்டுமே அந்த அணியால் அரையிறுதிக்கே தகுதி பெற முடியும் என்ற நிலை நிலவுகிறது. எனினும், கடந்த காலத்திலும் இப்படி கோப்பையை வெல்ல முடியாது என்ற கருதப்பட்ட ஜெர்மனி அணி திடீர் எழுச்சி பெற்று 1954, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் உலகக்கோப்பையை வென்றது என்பதையும் மறக்கமுடியாது.
இப்படி கோப்பையை வெல்லும் அணிகளாக சில அணிகள் பார்க்கப்பட்டாலும் பெல்ஜியம், நெதர்லாந்து, கொலம்பியா, குரோஷியா, மொராக்கோ, ஜப்பான் ஆகிய அணிகளும் தாக்கத்தை ஏற்படுத்தும் அணிகளாக கணிக்கப்பட்டுள்ளது.

