தோனி இல்லை.. ரோகித் சர்மா தான் ஃபேவரட் கிரிக்கெட்டர்..! - இளம் சிஎஸ்கே வீரர்!
2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோசமான தோல்விகளை சந்தித்தது. ஆனால், இளம் வீரர்கள் ஆயுஸ் மாத்ரே, டெவால்ட் பிரேவிஸ், உர்வில் பட்டேல் போன்றோர் தங்களது அதிரடி ஆட்டத்தால் அணிக்கு நம்பிக்கை அளித்தனர்.
2025 ஐபிஎல் தொடரானது சென்னை அணிக்கு மிகவும் மோசமான ஒரு சீசனாகவே அமைந்தது. நம்பிக்கையுடன் ஏலத்தில் எடுக்கப்பட்ட மூத்த வீரர்கள் அனைவரும் சொதப்ப, புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூட பாதியிலேயே தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
14 போட்டிகளில் 10 ஆட்டங்களில் படுதோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, அவர்களின் கோட்டையான சேப்பாக்கத்திலும் மோசமான தோல்விகளை பதிவுசெய்தது.
எல்லாமே சென்னை அணிக்கு பாதகமாக மாறினாலும் தொடரின் கடைசி நேரத்தில் அணிக்குள் எடுத்துவரப்பட்ட இளம் வீரர்களான டெவால்ட் பிரேவிஸ், ஆயுஸ் மாத்ரே, உர்வில் பட்டேல் போன்ற வீரர்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுத்தனர்.
அதிலும் சென்னை அணிக்கு பெரிய பிரச்னையாக இருந்த அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற குறையை தீர்த்துவைத்தார் ஆயுஸ் மாத்ரே. அதிலும் பலம்வாய்ந்த ஆர்சிபி அணிக்கு எதிராக 94 ரன்கள் அடித்து மிரட்டியிருந்தார், அதிக அனுபவம் வாய்ந்த புவனேஷ்குமாருக்கு எதிராக ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 26 ரன்கள் விளாசி அசத்தியிருந்தார். 2026 ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் நம்பிக்கை வீரராக ஆயுஸ் மாத்ரே இருந்துவருகிறார்.
தற்போது யு19 உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்திவரும் ஆயுஸ் மாத்ரே, ஐசிசி உடனான உரையாடலில் தன்னுடைய விருப்பமான வீரர் ரோகித் சர்மா என்று கூறியுள்ளார்.
ரோகித் சர்மா தான் என் ஃபேவரட்..
நடந்துவரும் 2026 யு19 உலகக்கோப்பையில் விளையாடிவரும் ஆயுஸ் மாத்ரே தலைமையிலான இந்திய அணி, யுஏஇ மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான போட்டியில் வென்று அடுத்த சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அடுத்த போட்டி நியூசிலாந்துக்கு எதிராக நாளை நடைபெறவிருக்கிறது.
இந்தசூழலில் ஐசிசி உடனான உரையாடலில் பேசியிருக்கும் ஆயுஸ் மாத்ரே, தன்னுடைய விருப்பமான கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா என்று கூறியுள்ளார். அப்போது பேசியிருக்கும் அவர், ரோகித் சர்மா தான் எனக்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர், ஏனென்றால் சிறுவயதிலிருந்தே அவரது பேட்டிங்கை பார்த்து வருகிறேன், மைதானத்திலும் மைதானத்திற்கு வெளியேயும் அவர் நடந்து கொள்ளும் விதம் மிகவும் தனித்துவமானது. நான் அவரிடம் பேசச் செல்லும்போதெல்லாம், என்னிடம் மிகவும் அமைதியாக பேசுவார், எனக்கு என்ன விவரம் வேண்டுமென்றாலும் விஷயங்களை விளக்குவதற்கு நேரம் எடுத்து கூறுவார். எந்த தயக்கமும் இல்லாமல் அவரை எந்த நேரத்திலும் என்னால் அழைக்க முடியும் என பேசியுள்ளார்.

