2019 உலகக்கோப்பையில் ராயுடு நீக்கப்பட்டதற்கு கோலி தான் காரணம்.. உத்தப்பா பகீர் குற்றச்சாட்டு!
இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் முதலில் அம்பத்தி ராயுடு தேர்ந்தெடுக்கப்பட்டார். உலகக்கோப்பைக்கான முந்தைய ஒருநாள் தொடரின் போது கூட என்னுடைய நம்பர் 4 பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு தான் என்று விராட் கோலி வெளிப்படையாக கூறினார்.
ஆனால் 2019 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணி உறுதிசெய்யப்படும்போது அம்பத்தி ராயுடுவின் பெயர் நீக்கப்பட்டு, அவருக்கு பதில் மாற்றுவீரராக விஜய் ஷங்கருடன் சென்றது இந்திய அணி. அங்கு ஒரு போட்டியில் விளையாடிய பிறகு விஜய் ஷங்கர் இந்தியாவிற்கு திரும்பினார்.
அரையிறுதிப்போட்டிவரை முன்னேறிய இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் இல்லாமல் படுதோல்வியை சந்தித்து கண்ணீருடன் நாடு திரும்பியது.
தன்னை அணியிலிருந்து நீக்கிய பிறகு இந்திய தேர்வுக்குழுவுக்கு எதிராக கடுமையான கருத்தை வெளிப்படுத்திய அம்பத்தி ராயுடு ஓய்வுபெறுவதாக விரக்தியில் அறிவித்தார்.
அம்பத்தி ராயுடு நீக்கத்திற்கு கோலி தான் காரணம்..
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற ராபின் உத்தப்பா, முதலில் யுவராஜ் சிங் தொடர்ந்து அணியில் இல்லாமல் போனதற்கு விராட் கோலி தான் காரணம் என்று குற்றஞ்சாட்டினார். பின்னர் 2019 ஒருநாள் உலகக்கோப்பையில் அம்பத்தி ராயுடு நீக்கப்பட்டதற்கும் விராட் கோலிதான் காரணம் என்று பகிரங்கமாக வெளிப்படுத்தினார்.
லல்லன்டோப் உடனான நேர்காணலின் போது பேசிய உத்தப்பா, "விராட் கோலிக்கு யாரையும் பிடிக்கவில்லை என்றால், அவருக்கு யாராவது சரியில்லை என்று உணர்ந்துவிட்டால், பின்னர் அவர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டார்கள். அம்பதி ராயுடு தான் அதற்கு மிகப்பெரிய உதாரணம். நீங்கள் அவருக்காக மோசமாக வருத்தப்பட வேண்டும். இங்கு அனைவருக்கும் விருப்பத்தேர்வுகள் என்பது உண்டு தான் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், ஆனால் ஒரு வீரரை உலகக்கோப்பை தேர்வுவரை அழைத்துச்சென்றுவிட்டு இறுதியில் நீங்கள் கதவுகளை அடைப்பது மிகவும் மோசமான செயல்.
உலகக்கோப்பையில் பங்கேற்பதற்காக அம்பத்தி ராயுடுவின் வீட்டிற்கே இந்திய அணிக்கான உடைகளும், கிட்களும் சென்றுவிட்டன. ஆனால் உலகக் கோப்பைக்கு போகப்போகிறோம் என்ற கனவோடு இருந்தவருக்கு நீங்கள் செய்தது ஏற்றுக்கொள்ள முடியாதது. அது என்னைப் பொறுத்தவரை நியாயமில்லை" என்று கோலி மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.