திருப்பதியில் நேர்த்திக்கடன்.. முட்டிப் போட்டு படியேறிய நிதிஷ் குமார் ரெட்டி! வைரல் வீடியோ!
21 வயதான இந்தியாவின் இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் குமார் ரெட்டி, ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து வங்கதேசத்துக்கு எதிரான இந்திய டி20 அணியில் இடம்பிடித்தார். அதில் 3 டி20 போட்டிகளில் இடம்பிடித்து அவர் முதல் டி20 அரைசதத்தையும் பதிவுசெய்து அசத்தினார்.
இந்த சூழலில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் ஆல்ரவுண்டர் பிரிவில் நிதிஷ்குமார் ரெட்டிக்கு இடம் கிடைத்தது. அனுபவம் இல்லாத வீரருக்கு பார்டர் கவாஸ்கர் தொடரில் எப்படி இடம் கொடுத்தீர்கள், அவரால் ஆஸ்திரேலியா மண்ணில் சிறப்பாக செயல்பட முடியாது என்ற விமர்சனங்கள் எழுந்தன.
ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்ட நிதிஷ்குமார் ரெட்டி, மெல்போர்ன் டெஸ்ட்டில் முதல் டெஸ்ட் சதமடித்தது அசத்தினார். மொத்தமாக, 5 டெஸ்ட் போட்டிகளில் 294 ரன்கள் அடித்து அசத்திய நிதிஷ்குமார், இந்தியாவிற்காக அதிக ரன்கள் அடித்த இரண்டாவது வீரராக மாறினார்.
திருப்பதி கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்திய நிதிஷ்குமார்..
போட்டிமிகுந்த கிரிக்கெட் பயணத்தில் 21 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகம் கிடைத்தது மட்டுமில்லாமல், பார்டர் கவாஸ்கர் டிரோபியும் நல்ல தொடராக அமைந்த நிலையில் திருப்பதி கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் நிதிஷ்குமார் ரெட்டி.
தன்னுடைய கோவில் பயணம் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் ஆந்திராவின் திருப்பதி கோவிலில் உள்ள அலிபிரியில் இருந்து தொடங்கும் திருமலைக்கு செல்லும் படிகட்டுகளில் முட்டி போட்டு படியேறும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.