டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உலகசாதனை.. கில்கிறிஸ்ட்டை மிஞ்சிய பண்ட்.. இந்தியா 3 பிரமாண்ட சாதனைகள்!
காலே டெஸ்டில் இந்தியா 462 ரன்கள் குவித்து, இலங்கை 284 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி 188 ரன்கள் பின்தங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் பண்ட் 66 ரன்கள் விளாச, இந்தியா 193 ரன்களுக்கு ஆல்அவுட். 382 ரன்கள் இலக்குடன் இலங்கை 84/4. பண்ட் 4918 பந்துகளில் 100 டெஸ்ட் சிக்சர்கள் அடித்து புதிய உலகசாதனை படைத்தார்; இந்தியாவுக்காக 100 டெஸ்ட் சிக்சர்கள் அடித்த முதல் வீரர் ஆனார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிவருகிறது. காலே மைதானத்தில் நடைபெற்றுவரும் முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தேவ்தத் படிக்கல்லின் அசத்தலான சதத்தின் உதவியால் 462 ரன்கள் குவித்தது. அதனைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 284 ரன்கள் எடுத்து 188 ரன்கள் பின்தங்கியது. முதல் சர்வதேச சதமடித்த இலங்கை வீரர் சோனல், இலங்கை கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். இந்திய அணியில் ஜடேஜா மற்றும் மனவ் சுதர் இருவரும் சேர்ந்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் 188 ரன்கள் முன்னிலையுடன் விளையாடிய இந்திய அணி 193 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. அதிகபட்சமாக 8 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் விளாசிய இந்திய வீரர் ரிஷப் பண்ட் 66 ரன்கள் குவித்து மிரட்டினார். 382 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிவரும் இலங்கை அணி 4ஆம் நாள் ஆட்டமுடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
ரிஷப் பண்ட் படைத்த உலகசாதனை!
இந்நிலையில் இந்த போட்டியில் 2 சிக்சர்களை அடித்த ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 100 சிக்சர்களை விளாசிய முதல் வீரராக புதிய உலகசாதனை படைத்துள்ளார். பந்துகளின் அடிப்படையில் வெறும் 4918 பந்துகளை எதிர்கொண்டு 100 டெஸ்ட் சிக்சர்களை அடித்திருக்கும் பண்ட், 6578 பந்துகளுடன் முதலிடத்தில் இருந்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையை முறியடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை அடிக்கும் முதல்வீரர் என்ற பெருமையையும் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார்.
மேலும் இதேபோட்டியில் 350வது டெஸ்ட் விக்கெட்டை கடந்த ரவீந்திர ஜடேஜா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 4000 ரன்கள் அடித்ததோடு 350 விக்கெட்டுகளை வீழ்த்திய உலகின் 3 வீரர்களுக்கு பிறகு 4வது வீரராக கைக்கோர்த்தார். கபில்தேவ், இயன் போதம், டேனியல் விட்டோரி போன்ற ஜாம்பவான்கள் வரிசையில் இணைந்துள்ளார்.
அதேபோல முதல் இன்னிங்ஸில் சதமடித்த தேவ்தத் படிக்கல் சவுரவ் கங்குலிக்கு பிறகு 21ஆம் நூற்றாண்டில் நம்பர்.3 வீரராக களமிறங்கி டெஸ்ட் சதமடித்த முதல் இடதுகை இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஒரே போட்டியில் 3 பிரமாண்ட சாதனைகளை படைத்திருக்கும் இந்திய அணி இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை வென்று 1-0 என முன்னிலைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

